Feb 26, 2026 - 12:31 PM -
0
மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணத்தீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நெல்லை உலர்த்துவதற்கான இரண்டு இயந்திரங்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதற்கான நிதிகளை அரசாங்கம் வழங்கும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
மண்முனை மேற்கு வவுணத்தீவு பிரதேச செயலகத்தின் விசேட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று (25) மாலை பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், டாக்டர் இ.சிறிநாத், மண்முனை மேற்கு வவுணத்தீவு பிரதேசசபையின் தவிசாளர் கோபாலபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் திணைக்களங்களின் தலைவர்கள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,கிராம சேவையாளர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இன்றைய கூட்டத்தின்போது தற்போது மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன் அண்மைக்காலமாக மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் முன்னெடுக்கப்படும் யானை பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன.
கடந்த காலத்தில் இந்த யானைப் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றபோதிலும் எந்த வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதில்லையென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.
வனஜீவராசிகள் திணைக்களத்திற்குரிய அமைச்சரும் வருகை தந்து பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து அதற்கான தீர்வு வழங்கப்படும் என்று கூறிச்சென்ற நிலையிலும் இதுவரையில் எந்த தீர்வும் வழங்கப்படாமல் வவுணதீவு மட்டுமன்றி மட்டக்களப்பு நகரும் தற்போது யானைகளினால் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
கூட்டங்கள் கூட்டப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும் போது அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதுடன் காலத்தினையும் நேரத்தினையும் வீண்விரயம் செய்யும் வகையில் கூட்டங்களை நடாத்தவேண்டாம் எனவும் இதன்போது கோரிக்கையினை முன்வைத்தார்.
இதன்போது வவுணதீவு பிரதேசத்திற்கு அண்மையாகவுள்ள மாந்தீவு பகுதியில் உள்ள யானைகளை அங்கிருந்து வெளியேற்றி யானைகள் உள்ள காடுகளுக்கு கொண்டுசெல்வது குறித்து ஆராயப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.
அதற்கு தேவையான அனைத்து வளங்களையும் பெற்றுக்கொள்ளுமாறும் ஆட்கள் பற்றாக்குறைக்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர், விவசாயிகள், பிரதேசசபை ஊழியர்கள், வாகனங்களையும் பயன்படுத்துமாறும் ஓரிரு தினங்களுக்குள் யானைகளை வெளியேற்றுமாறும் பணிப்புரைகளை வழங்கினார்.
இதேபோன்று அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக பிரதேசத்தில் விவசாயிகள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் விவசாயிகளுக்கான திட்டங்களை முன்னெடுப்பதில் அதிகாரிகள் மிகவும் மோசமாக செயற்படுவதாக இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன் சீரற்ற காலநிலையின்போது அறுவடைகள் நடைபெற்ற நிலையில் நெல்லை உலர்த்துவதற்கான வசதிகள் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் பாரிய நட்டங்களை எதிர்நோக்கியதாகவும் விவசாயிகளின் நெல்லை விற்பனை செய்வதில் பாரிய கட்டங்களை எதிர்நோக்கியதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டதுடன் பொலனறுவையிலிருந்தும் இம்முறை நெல்கொள்வனவு செய்பவர்கள் வராத நிலையில் தமது நெல்லை விற்பனை செய்வதில் பாரிய கஸ்டங்களை எதிர்நோக்கியதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் எனவும் இப்பகுதிகளில் நெல்லை உலர வைப்பதற்கான இரண்டு இயந்திரங்களை பொருத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறும் அதற்கான பணத்தினை அரசாங்கம் வழங்கும் எனவும் இதன்போது அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் பிரதேசத்தில் மேலதிக களஞ்சியவசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கப்படும் எனவும் எதிர்காலத்தில் விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தும் எனவும் அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று கன்னன்குடா பாலம் மற்றும் மகிழவெட்டுவான் பாலத்தின் நிலைமைகள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டதுடன் மிகமோசமான நிலையில் குறித்த பாலங்கள் உள்ளதனால் தற்காலிமான பாலங்களை அமைப்பதற்கு இந்தியாவின் தொழில்நுட்ப பிரிவினர் பார்வையிட்டு சென்றுள்ள நிலையில் இரண்டு பாலங்களை அமைப்பதற்கான உறுதியை அவர்கள் வழங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பிரபு இதன்போது தெரிவித்தார்.
இந்த கூட்டத்தின்போது விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் சுற்றுலா துறை அபிவிருத்தி, வனஇலாகாவின் செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை–மனித மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இப்பிரதேசம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு சுற்றாடல் அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தபோது பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
ஆனால் ஒரு வருடம் கடந்தும் அதே பிரச்சினைகள் குறித்து மீண்டும் பேச வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த மோதலுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டு வருவதுதான்.
இதன் விளைவாக காடுகளில் வாழும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நிலை அதிகரித்துள்ளது. மகாவலி திட்டத்தின் மூலம் தண்ணீர் வருகிறதா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், யானைகள் வருவது மட்டும் நிச்சயம். சமீபத்தில் வாழைச்சேனையில் ஏற்பட்ட சம்பவம் இதற்கு சான்றாகும்.
மேலும், மகாவலி திட்டத்தை முன்னிறுத்தி பாரிய அளவில் மண் அகழ்வு நடைபெற்று வருவதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய வாழ்வாதாரப் பகுதிகள் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகின்றன என்பதையும் நான் சுட்டிக்காட்டுகிறேன்.
தொடர்ச்சியான கனமழை மற்றும் முன்பு ஏற்பட்ட புயல் காரணமாக மாவட்டத்தில் நெற்பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வயல் வெட்டும் காலத்தில்கூட விவசாயிகள் நெல் காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஈரநெல் 5,000 ரூபாய்க்கு கூட விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீட்டு நிவாரணம் பெற முயன்றபோது 2026 பெப்ரவரி 13 ஆம் திகதி காப்பீட்டு காலம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதால் நிவாரணம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் அநியாயமான நிலை. நெல் கொள்வனவில் ஈடுபடும் சில பெரிய வர்த்தகர்கள் ஆடம்பர வாகனங்களும் ஹெலிகொப்டர்களும் வரை வாங்கும் நிலையில் உள்ளனர்.
ஆனால் இப்பகுதி விவசாயிகள் தங்களது உற்பத்தியைச் சந்தைப்படுத்த முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அரசியல் அல்லது நிர்வாக மட்டத்தில் மறைமுகச் செயற்பாடுகளா என்ற சந்தேகம் எழுகிறது.
மேலும், மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைமையிலான உள்ளூராட்சி சபைகள் முன்வைக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் தரப்பில் தாமதம் நிலவுகிறது.
தமிழரசுக் கட்சி சார்ந்த உள்ளூராட்சி அமைப்புகள் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதைத் தடுக்க முயற்சி நடைபெறுகின்றதா என்ற சந்தேகம் உள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.
--

