Feb 26, 2026 - 04:50 PM -
0
Prime மற்றும் Melwa குழுமங்கள், இலங்கையின் இரு பெரும் வர்த்தக ஜாம்பவான்கள் இணைந்து, நாட்டின் மிகவும் தொலைநோக்குடைய நகர்ப்புற அபிவிருத்தி முன்னெடுப்பில் ஒரு தீர்க்கமான மைல்கல்லைப் பதிவு செய்துள்ளன. இந்த வர்த்தகக் கூட்டாண்மையானது, கொழும்பு துறைமுக நகரத்தில் (Port City Colombo) நான்கு ஏக்கருக்கும் மேலான பரப்பளவைக் கொண்டதும், எழில்மிகு இந்தியப் பெருங்கடலை முன்னோக்கியுள்ளதுமான மிகச்சிறந்த Marina நிலப்பரப்புகளில் ஒன்றை கையகப்படுத்தியுள்ளன.
நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்படவுள்ள இந்தப் பிரம்மாண்ட அதி-சொகுசு அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்திலுள்ள அனைத்து வீடுகளும், Marina இன் எழில்மிகு காட்சிகளை நேரடியாகக் கண்டுகளிக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளன. இச்செயற்திட்டத்தின் ஊடாக சுமார் 250 மில்லியன் அமெரிக்க டொலர் மொத்த வருமானமாக ஈட்டப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உயர்தர நகர்ப்புற வாழ்வியலுக்குப் புதிய வரைவிலக்கணத்தை ஏற்படுத்தித் தருவதுடன் மட்டுமல்லாமல், இச்செயற்திட்டம் பாரிய பொருளாதார விழுமியங்களை உருவாக்குவதுடன், சர்வதேச முதலீடுகளையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தெற்காசியாவின் ஒரு வளர்ந்து வரும் போட்டித்தன்மை மிக்க மையமாக கொழும்பை மேலும் நிலைநிறுத்தும்.
Prime மற்றும் Melwa குழுமங்களின் கொழும்பு துறைமுக நகரத்துடனான (Port City Colombo) இந்த இணைந்த முன்னெடுப்பானது, ஒரு கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல, இலங்கையின் உலகளாவிய எதிர்காலத்தின் ஒரு பகுதியை சுவீகரிக்கும் ஒரு பாரிய மாற்றமாகும். மேலும், இலங்கையை உலகத்தரம் வாய்ந்த வர்த்தக மற்றும் வாழ்க்கைமுறை மையமாக மாற்றியமைக்கும் துறைமுக நகரத்தின் தூரநோக்கை இது மேலும் உறுதிப்படுத்துகின்றது. இது ஒரு கூட்டு முயற்சி திட்டமாகும். Prime Group இன் தாய் நிறுவனமான Prime Lands (Pvt) Ltd இன் துணை நிறுவனமான “Prime Melwa Port City (Pvt) Ltd” ஊடாக இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படும்.
Prime Group இன் தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “Prime Group இன் தாரக மந்திரமான இலங்கையின் ரியல்எஸ்டேட் துறையை உலகிற்கு எடுத்துச் செல்லல் என்பதற்கு அமைய, எமது நாட்டின் ரியல் எஸ்டேட் ஆற்றல்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் புதியதொரு மைல்கல்லை நோக்கி நாம் காலடி எடுத்து வைக்கின்றோம். கொழும்பு துறைமுக நகர (Port City Colombo) அபிவிருத்தித் திட்டமானது, இலங்கையை ஒரு போட்டித் தன்மை வாய்ந்த சர்வதேச சொகுசு சொத்துச் சந்தையாக நிலைநிறுத்துவதற்கும், எமது சர்வதேச இருப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு மூலோபாய வாய்ப்பை வழங்குகின்றது. இங்கு கட்டமைக்கப்படவுள்ள பிரம்மாண்டமான அதி-சொகுசு அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம், சர்வதேச வர்த்தகப் பயணிகள், புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டவர்கள் மற்றும் நுட்பமான முதலீட்டாளர்களைப் பெருமளவில் கவரும் என நாம் உறுதியாக நம்புகின்றோம். இது வெளிநாட்டு கொள்வனவாளர்களை ஈர்ப்பதுடன், குறிப்பிடத்தக்களவிலான மேலதிக வருமானத்தை ஈட்டித்தருவதற்கும், இலங்கையின் ரியல் எஸ்டேட்டை ஏற்றுமதி செய்யும் எமது தூரநோக்கை வலுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.” என்றார்.
கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு முக்கிய சிறப்பம்சமானது, அதன் பணப்பரிமாற்றங்கள் இலங்கை ரூபாய்க்குப் பதிலாக அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய வெளிநாட்டு செலவாணிகளில் மேற்கொள்ளப்படுவதாகும். இச்செயற்திட்டமானது நாணய மதிப்பிறக்கத்திற்கு எதிரான ஒரு நம்பகமான பாதுகாப்பு கவசமாக அமைவதுடன், முதலீட்டாளர்களுக்கு நீண்டகால நிதி ரீதியான இடர்களைக் கணிசமாகக் குறைப்பதற்கும் வழிவகுக்கின்றது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தில் Prime Group இன் மூலோபாய பங்காளர் எனும் வகையில் Melwa குழுமம் தனது தொழில்துறைசார் வலிமையையும், தேசத்தை கட்டியெழுப்பும் மரபையும் இந்த கைகோர்ப்பில் இணைத்துள்ளது.
Melwa குழுமத்தின் பணிப்பாளர் பி.பி.ஆனந்தராஜா கருத்துத் தெரிவிக்கையில், “உருக்கு இரும்பு உற்பத்தித் தொழிலில் எமது ஆரம்பத்தை மேற்கொண்டு, இன்று இலங்கையின் மிக முக்கியமான பல்முகப்படுத்தப்பட்ட கைத்தொழில் குழுமங்களில் ஒன்றாக Melwa உருவெடுத்துள்ளது. நாட்டின் எதிர்காலத்தை முன்னிலையிற் கொண்டே மெல்வா நிறுவனம் எப்போதும் தனது கட்டுமானங்களை முன்னெடுத்து வருகின்றது. கொழும்பு துறைமுக நகர (Port City Colombo) அபிவிருத்தித் திட்டத்திற்காக Prime Group உடன் கைகோர்ப்பது எமது அந்த தூரநோக்கையே பிரதிபலிக்கின்றது. நாம் இணைந்து உருவாக்கும் இந்தச் செயற்திட்டமானது, சொகுசு வாழ்வியலுக்கு ஒரு புதிய மைல்கல்லை ஏற்படுத்துவதுடன், சர்வதேச சொத்துச் சந்தை வரைபடத்தில் இலங்கையை உறுதியாக நிலைநிறுத்தும்.” என்றார்.
கொழும்பு துறைமுக நகரத்தின் (Port City Colombo) Marina பகுதியை நேரடியாக முன்னோக்கியுள்ள இறுதி நிலப்பரப்பாக இது அமைவதால், இலங்கையின் முதலாவது அந்நியச் செலாவணி கொடுக்கல் வாங்கல்களுக்காக ஒதுக்கப்பட்ட பல்துறை விசேட பொருளாதார வலயத்தினுள் இது ஒரு முதன்மையான அபிவிருத்தி வாய்ப்பைப் பிரதிபலிக்கின்றது. இந்த நிலக் கொள்வனவுடன், Marina District இலுள்ள எட்டு நிலப்பரப்புகளில் ஏழு ஏற்கனவே அபிவிருத்தியாளர்களுக்கென குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன. இது இப்பிரதேசத்தின் 90 சதவீத நிலப்பயன்பாட்டை வெளிப்படுத்துவதுடன், இதன் நீண்டகாலத் திறன் மீதான முதலீட்டாளர்களின் பலமான நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளது.
CHEC Port City Colombo (Pvt) Ltd. இன் முகாமைத்துவ பணிப்பாளர் சியொங் ஹொங்பெங் (Xiong Hongfeng) கருத்துத் தெரிவிக்கையில், “Prime Group மற்றும் Melwa போன்ற முன்னணி உள்நாட்டு நிறுவனங்கள் இந்த நிலையில் முதலீடுகளை மேற்கொள்வதனூடாக, நாட்டின் எதிர்காலத்தின் மீது காணப்படும் நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொழும்பு துறைமுக நகரில் (Port City Colombo) நாம் கட்டியெழுப்பும் அம்சங்களின் உறுதிப்பாடும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தொலைநோக்குடைய உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை வரவேற்பதற்கு கொழும்பு துறைமுக நகரம் (Port City Colombo) தயாராகவுள்ள நிலையில், இந்த பிராந்திய வர்த்தக மற்றும் வாழ்க்கைமுறை மையத்தின் அடுத்த அத்தியாயத்தை வடிவமைக்க நாங்கள் தயாராக உள்ளோம். எமது அடித்தளம் பலமாக இடப்பட்டுள்ளதுடன், அதற்கான ஒழுங்குமுறையான கட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்டகால மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.” என்றார்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தினூடாக, Prime மற்றும் Melwa இணைந்து, ஒரு கட்டுமானத் திட்டத்தை உருவாக்குவது மட்டுமன்றி, இலங்கையின் சர்வதேச ரீதியான எதிர்காலத்தையும் உறுதி செய்துள்ளன.

