செய்திகள்
உலக கிண்ண தோல்விக்கு பின்னர் தசுனின் உருக்கமான பதிவு

Feb 26, 2026 - 05:09 PM -

0

உலக கிண்ண தோல்விக்கு பின்னர் தசுனின் உருக்கமான பதிவு

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த திறமைகளை தமது அணியினரால் வெளிப்படுத்த முடியாமல் போனமை தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக அணித்தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார். 

இன்று (26) தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அவர் அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை வெளியேற நேரிட்டமையின் கவலையை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்கிறேன். 

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சந்தித்த தோல்வி உட்பட, தலைமைத்துவம் சவால்களை எதிர்கொண்ட போதிலும், ஒரு அணியாக நாங்கள் பாரிய நம்பிக்கை, தெளிவான திட்டங்கள் மற்றும் உயர்ந்த எதிர்பார்ப்புகளுடனேயே இத்தொடருக்கு வந்தோம். 

இலங்கை இந்தத் தொடரை இணைந்து நடத்தும் நாடு என்பதால், கடந்த காலத் தோல்விகளைத் திருத்தி இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் வெகுதூரம் பயணிக்க முடியும் என நான் உண்மையாகவே நம்பினேன். 

உங்களில் பலருக்கு என் மீதும் அணியின் மீதும் ஏற்பட்டுள்ள விரக்தி, வேதனை மற்றும் கோபத்தை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. 

இலங்கை கிரிக்கெட் அல்லது கிரிக்கெட் கட்டமைப்புக்குள் கடினமாக உழைத்து, இந்தப் பாரம்பரியத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல அதிகபட்ச முயற்சி எடுக்கும் வீரர்களைக் கைவிட வேண்டாம் என நான் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன். 

மில்லியன் கணக்கானோரின் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் எமது தோள்களில் சுமக்கிறோம் என்பதை அறிந்திருக்கும் போது, தோல்வி என்பது எப்போதுமே எளிதான விடயமல்ல. 

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பாரிய ஈர்ப்பு உள்ள பின்னணியில், விமர்சனங்கள், விவாதங்கள் மற்றும் எல்லா இடங்களிலும் பகிரப்படும் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 

எவ்வாறாயினும், நிலைமை எதுவாக இருந்தாலும், எனக்குத் தெரிந்த அனைத்தையும் தொடர்ந்தும் அணிக்காக நான் வழங்குவேன். 

நான் எப்போதும் ஒரு நோக்கத்துடனேயே விளையாடி வந்துள்ளேன். அது இலங்கைக்காக. 

உங்களுக்குக் கிடைக்க வேண்டிய முடிவை எம்மால் பெற்றுக்கொடுக்க முடியாமல் போனமை தொடர்பில் நான் கவலையடைகிறேன். எமக்காக பக்கபலமாக இருந்தமைக்கு உங்களுக்கு நன்றி என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05