Feb 26, 2026 - 05:33 PM -
0
இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, தனது வணிகத் தொடர்ச்சியான முகாமைத்துவ அமைப்பிற்காக (Business Continuity Management System) ISO 22301:2019 சர்வதேச தரச்சான்றிதழைப் பெற்றுள்ளது. Bureau Veritas நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீன தணிக்கையைத் தொடர்ந்து இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தத் தணிக்கையானது கொழும்பு மற்றும் நாடு தழுவிய கிளை வலையமைப்பிலுள்ள இடர் முகாமைத்துவ, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட வங்கியின் அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கியிருந்தது.
HNBஇன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த இது குறித்துக் கூறுகையில்:
வேகமான டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் மாறிவரும் செயல்பாட்டு இடர்கள் நிறைந்த இந்தக் காலகட்டத்தில், இந்தத் தரச்சான்றிதழானது HNB இன் அனைத்து மட்டங்களிலும் வணிகத் தொடர்ச்சி முகாமைத்துவம் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதற்கான ஒரு பலமான அங்கீகாரமாகும். இது எமது குழுக்களிடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் ஒழுக்கமான திட்டமிடல், முறையான சோதனைகள் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் கூட எமது அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைப்பதையும், மீட்பு நடவடிக்கைகள் மிக விரைவாக முன்னெடுக்கப்படுவதையும் இது உறுதி செய்கிறது. இதன் மூலம் எமது வாடிக்கையாளர்கள் எவ்விதத் தடையுமின்றி பாதுகாப்பான வங்கிச் சேவைகளைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும். என தெரிவித்தார்.
அமைப்புக் கோளாறுகள், இயற்கை நிகழ்வுகள் அல்லது சைபர் தாக்குதல்கள் போன்ற அவசர காலங்களில், சாத்தியமான அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, இடையூறுகளுக்குத் திறம்படப் பதிலளிப்பதோடு, முக்கியமான வங்கிச் சேவைகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் HNB வங்கியின் திறனை இந்தச் சான்றிதழ் உறுதிப்படுத்துகிறது. அதேவேளை, இது வாடிக்கையாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கூட்டாளர்களின் நலன்களையும் பாதுகாக்கிறது.
இந்தச் சான்றிதழ் பயணமானது, வங்கியின் இடர் முகாமைத்துவப் பிரிவின் கீழ் இயங்கும் வணிகத் தொடர்ச்சி முகாமைத்துவ குழுவினால் வழிநடத்தப்பட்ட ஒரு மையப்படுத்தப்பட்ட மற்றும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமாகும். இதற்கு வங்கியின் அனைத்து வணிகப் பிரிவுகள் மற்றும் தலைமை அலுவலகத் துறைகளின் வலுவான ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைத்தன. இந்தக் கூட்டு முயற்சியானது, நிறுவன ரீதியிலான செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளை சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் வெற்றிகரமாக இணைப்பதை உறுதி செய்தது. இது வங்கியின் கிளை வலையமைப்பு முழுவதிலும் அதன் மீளெழுச்சித் திறன் மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலை ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்தத் தணிக்கையானது, வங்கியின் இடர் மதிப்பீடுகள், அவசரகாலத் தயார்நிலை, பேரிடர் மீட்புத் திறன்கள் மற்றும் அனைத்து முக்கியமான செயல்பாட்டுப் பிரிவுகளிலும் உள்ள முறையான தொடர்ச்சித் திட்டமிடல் ஆகியவற்றை ஆய்வு செய்தது. ஏற்கனவே உள்ள கட்டமைப்பை சர்வதேசத் தரத்துடன் இணைப்பதற்கான விரிவான இடைவெளி பகுப்பாய்வின் மூலம் Ernst & Young இந்தச் செயல்முறைக்கு ஆதரவளித்தது. மேலும், இந்தத் தயாரிப்புக் குழுவானது இடர் மதிப்பீட்டு நடைமுறைகளை வலுப்படுத்தியதுடன், பேரிடர் மீட்பு நெறிமுறைகளை மேம்படுத்தி, வணிகத் தொடர்ச்சி உத்திகளை உறுதிப்படுத்தியது. இதன் மூலம் வங்கியின் வணிகத் தொடர்ச்சி முகாமைத்துவ நடைமுறைகள் ISO 22301 தேவைகளுடன் முழுமையாக ஒத்துப்போவதை உறுதி செய்தது.
HNB இன் துணைப் பொது தலைவரும் தலைமை இடர் அதிகாரியுமான ருவான் மானதுங்க கூறுகையில்:
எமது வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, வணிகத் தொடர்ச்சி என்பது எத்தகைய சூழ்நிலையிலும் அவர்கள் HNBஐ நம்பலாம் என்பதாகும். தொடர்ச்சியைப் பேணுவதற்கு நிலையான மதிப்பீடு மற்றும் மேம்பாடு அவசியம் என்பதை இந்தச் சான்றிதழ் அங்கீகரிக்கிறது. மேலும், இது எமது ஒழுக்கமான இடர் முகாமைத்துவத்துக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், எக்காலத்திலும் பாதுகாப்பான மற்றும் தடையற்ற வங்கிச் சேவைகளை உறுதிப்படுத்துகிறது. என தெரிவித்தார்.
வணிகத் தொடர்ச்சி முகாமைத்துவத்துக்கான உலகின் முன்னணித் தரமாக ISO 22301 அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியான ஆய்வு மற்றும் மேம்பாட்டைக் கோரும் 'திட்டமிடுதல்- செயல்படுத்துதல்-சரிபார்த்தல்-நடவடிக்கை எடுத்தல் எனும் ஒழுக்கமான மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. முதலில் 2012இல் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் 2019இல் புதுப்பிக்கப்பட்ட இந்தத் தரத்தை, உலகம் முழுவதும் 53,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. இந்தச் சான்றிதழைப் பெற்றதன் மூலம், உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் ஒத்துப்போகும் நிலையான செயல்பாட்டு மீளெழுத்தி திறன் மற்றும் முதிர்ச்சியடைந்த நிர்வாகத் திறனை வெளிப்படுத்தும் ஒரு சில தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் வரிசையில் HNB வங்கியும் இணைந்துள்ளது.
நிதித்துறையில் மீளெழுச்சித் திறன் மற்றும் நம்பகத்தன்மைக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் இவ்வேளையில், இந்தச் சான்றிதழானது வங்கியின் வைப்பாளர்கள், வாடிக்கையாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் வணிகக் கூட்டாளர்களிடையே நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த மைல்கல்லின் ஊடாக, HNB தொடர்ந்து தொழில்துறைக்கான தரங்களை நிலைநாட்டி வருகிறது. அத்துடன், இலங்கை முழுவதும் ஸ்திரத்தன்மை, தடையற்ற சேவை மற்றும் பொறுப்புள்ள வங்கிச் சேவைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நம்பகமான நிதிப் பங்குதாரராக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

