Feb 26, 2026 - 06:33 PM -
0
இலங்கை மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த அடையாள பணிப்புறக்கணிப்பை வன்மையாகக் கண்டிப்பதாக, சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெறும் திட்டத்தை தெரிவு செய்த ஊழியர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வலுசக்தி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை சட்டவிரோதமானது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொழிற்சங்கத் தலைமைகளிடமிருந்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், 25 சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்களே இதில் கலந்துகொண்டதால் இந்த நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போது நடைமுறையிலுள்ள மின்சார சபை மறுசீரமைப்புச் செயற்பாட்டை சீர்குலைக்கும் வகையிலோ அல்லது அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலோ முன்னெடுக்கப்படும் எவ்வித நடவடிக்கைகளிலும் பங்கேற்க வேண்டாம் எனத் தமது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இலங்கை மின்சார சபையின் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெறும் திட்டத்தைத் தெரிவு செய்த ஊழியர்கள் எவரும் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும், மறுசீரமைப்பைச் சீர்குலைக்கும் நோக்கில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான எந்தவொரு நடவடிக்கையிலும் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த தொழிற்சங்கங்களின் அச்சுறுத்தல்களுக்குப் அச்சப்பட வேண்டாம் என, சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெறும் திட்டத்தைத் தெரிவு செய்த ஊழியர்களின் ஒன்றியம் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் நலன்கருதி குறித்த திகதியை வர்த்தமானியில் வெளியிடுவதன் மூலம் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் இறுதிக் கட்டத்தைத் துரிதப்படுத்துமாறும் வலுசக்தி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏதேனும் காரணங்களால் குறித்த திகதியை வர்த்தமானியில் வெளியிடுவது தாமதமானால், அங்கீகரிக்கப்பட்ட சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறும் அவர்கள் அமைச்சரிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

