Feb 27, 2026 - 06:05 PM -
0
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில் அதிர்ச்சிகர தகவலை முன்வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த சில காலங்களாக சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் தென்படாததால் சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவின. இருப்பினும், அவர் தனது குழந்தைகளின் கல்வி மற்றும் வெளிநாட்டுப் பணிகளுக்காக அங்கேயே தங்கியிருப்பதாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில்தான் விவாகரத்து தாக்கல் செய்துள்ளார்.
விவாகரத்து மனுவில், "நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்தார். அதனை கண்டுபிடித்த பிறகு விஜயால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். விஜய் நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டது. 2021 ஆம் ஆண்டு ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வாழ்ந்தோம்" என்று சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சங்கீதா தனது விவாகரத்து மனுவில், "நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.
கடந்த 5 ஆண்டுகளாக மனதளவில் அவர் என்னை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானேன். அந்த உறவை முறித்துக்கொள்வதாக கூறினார். ஆனால் அவரது நடவடிக்கையில் மாற்றம் இல்லை. திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.
சம்பந்தப்பட்ட நடிகையோடு விஜய் வெளிநாடுகளுக்கு சென்றார். வெளிநாடுகளுக்கு சென்றதை நடிகையே பகிர்ந்தார். விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை அந்த நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. ஆனால், அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.
பொது வெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. கணவரிடம் ஏதேனும் அழுத்தம் வந்தால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன். தேவைப்பட்டால் எனது கணவருடன் உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2 ஆவது எதிர்மனுதாரராக சேர்ப்பேன். விஜய்யின் நடத்தை குழந்தைகளுக்கு அவமானம் ஏற்பட்டது. என்னை தொடர்ந்து அலட்சியப்படுத்தியதால் தனித்து வாழ்ந்து வருகிறேன்.
விஜய்யிடம் சமூக அந்தஸ்து மற்றும் வருவாயை கருத்தில் வைத்து எனக்கு ஜீவனாம்சம் வாங்கித் தர வேண்டும். விஜயின் பொதுவெளி பிம்பத்தைக் கருதி நீதிமன்றத்தை நாடாமல் இருந்தேன். பேச்சுவார்த்தை நடத்த இருமுறை முயற்சி மேற்கொண்டும் அது தோல்வியில் முடிந்தது" என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதற்கிடையே கடந்த பிப். 24 ஆம் திகதி செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த இந்த விவாகரத்து மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரபல நடிகராக இருந்து வரும் விஜய், சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்தநிலையில் அவரது மனைவி, விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

