Feb 27, 2026 - 07:33 PM -
0
2009/2010 ஆம் ஆண்டுகளில் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் குழுவின் தரப் பிரச்சினைகள் தொடர்பாக, மார்ச் மாதம் 03 ஆம் திகதி பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னால் நடத்தப்படவிருந்த அமைதிப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
2009/2010 குழுவின் கிராம உத்தியோகத்தர்களுக்கும், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர் (உள்நாட்டலுவல்கள்), மேலதிக செயலாளர் (கிராம அலுவலர் நிர்வாகம்), நிறுவனப் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2009/2010 கிராம உத்தியோகத்தர்களின் தரப் பிரச்சினைகளுக்கு, விடயப்பொறுப்பு அமைச்சருடன் கலந்துரையாடி எதிர்வரும் வாரத்திற்குள் நிலையான தீர்வொன்றை எழுத்துப்பூர்வமாக வழங்குவதாக அமைச்சின் செயலாளர் குறித்த கலந்துரையாடலில் தெரிவித்ததாக இந்த ஒன்றியத்தின் ஊடகச் செயலாளர் குமுது வடுமுல்ல தெரிவித்தார்.
இந்த இணக்கப்பாட்டின் காரணமாக மார்ச் 03 ஆம் திகதி நடத்தப்படவிருந்த அமைதிப் போராட்டம் தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாகவும், எதிர்வரும் வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் மார்ச் 16 ஆம் திகதி குறித்த போராட்டத்திற்குப் பதிலாகப் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

