Feb 27, 2026 - 11:55 PM -
0
2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது ரம்புக்கனை பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்த சம்பவத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான பதில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று (27) மனுதாரர் தரப்புக்கு கால அவகாசம் வழங்கியது.
ஜனக் டி சில்வா, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த வழக்கு தொடர்பான பதில் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவில்லை என்பதை நீதியரசர்கள் குழாம் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்குச் சுட்டிக்காட்டியது.
இதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள், இச்சம்பவத்தில் காயமடைந்த சில மனுதாரர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தமையினால், பதில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய முடியாமல் போனதாகத் தெரிவித்தனர்.
எனவே, அவற்றைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு அந்த சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன, இந்த மனுக்கள் தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, பதில் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் அவற்றை ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதியரசர்கள் குழாம், மனு மீதான விசாரணையை செப்டம்பர் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
2022 ஆம் ஆண்டு போராட்டக் காலத்தில் ரம்புக்கனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்ட அமைதிப் போராட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சமிந்த லக்ஷான் என்ற 41 வயதுடைய நபர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவரின் மனைவி மற்றும் காயமடைந்தவர்களினால் மொத்தம் 07 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு உத்தரவிட்டதாகக் கூறப்படும் கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

