Mar 2, 2026 - 08:14 AM -
0
சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ள 'ஆரோக்யா' செயற்றிட்டத்திலிருந்து இன்று (02) முதல் விலகுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காமையினாலேயே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அதன் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹம்சமால் வீரசூரிய தெரிவித்தார்.
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு மேலதிகமாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தற்போது மேலும் 7 தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய வைத்தியர் ஹம்சமால் வீரசூரிய:
"இந்த ஆரோக்யா செயற்றிட்டம் என்றால் என்ன? இதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது குறித்துக் கூட எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. இந்தச் செயற்றிட்டத்திற்கு ஏதேனும் சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளதா? இது யாருடைய அனுமதியுடன் செய்யப்படுகிறது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? நாட்டின் சுகாதார சேவையில் பாரிய பிரச்சினைகள் பல உள்ள நிலையில், பிரச்சினை இல்லாத இடங்களில் ஒரே மாதிரியான இருவேறு வேலைகளைச் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இது அரசியல் நோக்கத்திற்காகச் செய்யப்படும் ஒரு வேலை என எமக்கு நியாயமான சந்தேகம் உள்ளது. வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத்துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு, பிரச்சினை இல்லாத இடங்களில் சுயலாபம் தேடுகிறார்கள்.
எனவே, எந்த விபரங்களும் தெரியாத, அரசியல் முகமூடி அணிந்த இவ்வாறான செயற்பாடுகளில் பங்கேற்பதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு தீர்மானித்துள்ளது," எனக் குறிப்பிட்டார்.

