Mar 25, 2026 - 03:56 PM -
0
ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை வடமாகாண கல்வித் திணைக்களம் பரிசீலிக்காமல், மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (25) இடம்பெற்ற ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்வேறு நோய்க் காரணங்களினால் பாதிக்கப்பட்டவர்களையும், ஏற்கனவே கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்களையும் மீண்டும் இடமாற்றம் செய்வதற்கு வடமாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஆசிரியர்கள் தமது இடமாற்றம் தொடர்பான மேன்முறையீடுகளைக் கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ள போதிலும், அவற்றை எதனையும் பரிசீலிக்காது, 'தாம் சொல்வதை மாத்திரமே செய்ய வேண்டும்' என்ற சர்வாதிகாரப் போக்குடன் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது." என அவர் குற்றம் சாட்டினார்.
ஆசிரியர்களின் இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு முன்பாக நாளை முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
--
