Mar 26, 2026 - 12:21 PM -
0
'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையான 1,911 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் இடம்பெறும் அனைத்து ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்க 0777 128128 என்ற புதிய வட்ஸ்எப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், திட்டமிட்ட குற்றங்கள் குறித்து நாடு முழுவதுமுள்ள 608 பொலிஸ் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 1997 மற்றும் 119 ஆகிய இலக்கங்கள் ஊடாகவும் தகவல்களை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் தகவல் வழங்கிய சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொலிஸாரின் பங்களிப்பு:
2025 ஒக்டோபர் 30 அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் கீழ், நேற்று (25) வரை 1,071 கிலோ ஹெரோயின், 1,938 கிலோ ஐஸ், 4,917 கிலோ கஞ்சா மற்றும் 99,454 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 114,000 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 215 பேரின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2026 ஜனவரி 1 முதல் இதுவரை 24 இலட்சம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 1,479 பேர் பல்வேறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 36,815 பேரும், போதையில் வாகனம் செலுத்திய 28,270 சாரதிகளும் அடங்குவர். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் தேடப்பட்டு வந்த 29 சர்வதேச குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் 89 பேருக்கு எதிராக 'சிவப்பு அறிவித்தல்' விடுக்கப்பட்டுள்ளது. 2024 முதல் இதுவரை சுமார் 3,313 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரசால் முடக்கப்பட்டுள்ளன.
முப்படைகளின் பங்களிப்பு:
இராணுவம்: இராணுவத் தளபதியின் நேரடி மேற்பார்வையில் சுமார் 7,000 இராணுவத்தினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட சோதனைகளில் நேரடியாகப் பங்கேற்று 200 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.
விமானப்படை: சுமார் 250 மணிநேர வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்களைக் கண்டறிய உதவுவதாக குறூப் கெப்டன் நலின் வேவக்கும்புர குறிப்பிட்டார்.
கடற்படை: சர்வதேச கடல் எல்லைகளில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், 2025 இல் 71 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களையும், 2026 இல் இதுவரை 25 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
இலங்கை சுங்கம்:
'முழு நாடுமே ஒன்றாக' எனும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நடவடிக்கையின் கீழ், சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கை சுங்கத் திணைக்களம் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தானும் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட அவர், அக்கொள்கலன்களில் ஒரு தொகுதியில் எவ்வித சட்டவிரோத சிக்கல்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.
2025 ஆம் ஆண்டில் மாத்திரம் பல்வேறு வகையான போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் 147 முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 435 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் சந்தைப் பெறுமதி 5.8 பில்லியன் ரூபா என சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
