Mar 26, 2026 - 06:41 PM -
0
நமது நாட்டின் எரிசக்தித் துறையில் பெரும் நெருக்கடி உருவாகி, இது பேரழிவில் முடியும் நிலை உருவாகி வருவதால், எரிசக்தி நெருக்கடியை கையாள்வதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். மத்திய கிழக்கு போரை காரணமாக காட்டி நாட்டின் பிரச்சினைகளிலிருந்து அரசாங்கம் தப்பிப்பதற்கு முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பு வாலுக்கராம விகாரையில் இன்று (26) இடம்பெற்ற அன்னதான புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சமயமே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்த எரிசக்தி நெருக்கடிக்கு லக்விஜய நுரச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் போதுமான மின் உற்பத்தி இல்லாமையே முக்கிய காரணமாகும். தரம் குறைந்த நிலக்கரி பயன்பாடே இதற்கு காரணமாகும். நேற்றும் 168 மெகாவோட் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த தட்டுப்பாட்டை ஈடு செய்து கொள்வதற்கு டீசல் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படுவதால், மின்சாரக் கட்டணம் அதிகரித்து மக்களுக்கு அதிக சுமை ஏற்படுவதோடு, எரிபொருட்களுக்கான தட்டுப்பாடுகளும் நேர்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு போரால் பல சவால்கள் எழினும், அவற்றை குறைத்துக்கொள்வதற்கு வாய்ப்புகள் தோன்றும்போது அதற்காக முன்கூட்டியே திட்டமிடும் திறன் இருந்தும் அரசாங்கம் எந்த முன்கணிப்புகளையும் மேற்கொள்ளவில்லை. நாடாக எம்மால் எடுக்க முடியுமான முன்னாயத்த ஏற்பாடுகளை செய்திருக்கலாம்.
இப்போது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கே இந்த எரிசக்தி பாதுகாப்பின்மை காரணமாக அமைந்து காணப்படுகின்றன. இதனால் பல சவால்களும் எழுந்துள்ளன. தரம் குறைந்த நிலக்கரி பிரச்சினைக்கு அரசாங்கம் இன்னும் உரிய தீர்வுகளை முன்வைக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
நாட்டின் எரிபொருள் கையிருப்பு நிலை குறித்து அரசாங்கத்திற்கு தெளிவான கருத்தே இல்லை. எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் தொடர்ச்சியான மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பது குறித்தும் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்.
இந்த விவகாரங்களை பாராளுமன்றத்தில் விவாதிக்கும் நாட்களையும் அரசாங்கம் குறைத்துள்ளது. போரை காரணமாக காட்டி அரசாங்கம் நிலக்கரி முறைகேட்டை மூடி மறைத்து, உண்மையை புரிந்துகொள்ளாமல் நாட்டையும் மக்களையும் கனவுலகில் அழைத்துச் செல்லும் நடவடிக்கையை முன்னெடுத்த வண்ணம் இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
தரம் குறைந்த நிலக்கரி பயன்பாடு காரணமாக உரிய மின் உற்பத்தி நடைபெறாமல் தொடர் மின்சார வழங்கலில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண அரசாங்கத்திடம் சரியான செயற்திட்டமொன்று அமைந்து காணப்பட வேண்டும். அரசாங்கம் எல்லாவற்றையும் தயாரின்றி தாமதமாகவே செய்கிறது. அமைச்சர்கள் மின்சாரச் சிக்கனம் குறித்து மக்களுக்கு அறிவுரை கூறுவதற்கு முன் தரம் குறைந்த நிலக்கரிக்குத் தீர்வு காண வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ரஷ்யா மற்றும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கும், தரம் குறைந்த நிலக்கரிக்குப் பதிலாக தரமான நிலக்கரியை பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசாங்கத்தின் கொள்கைகளால் இப்போது தேசிய பாதுகாப்பே அபாயத்தில் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எரிபொருட்கள், தொடர் மின்சாரம், எரிசக்தி ஆற்றல் ஆகியவற்றின் மீது நாட்டின் பொருளாதார உயிர்ப்பு தங்கியுள்ளது. தொடர்ச்சியான மின்சாரத்தைப் பெற்றுக் கொடுக்க முடியாதபோது நேரடி வெளிநாட்டு முதலீடுகள் எமது நாட்டை நோக்கி வராது. இதனால் பொருளாதார சுருக்கம், வருவாய் குறைவு, வாழ்வாதார இழப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு என்பன ஏற்படும். அவ்வாறே, அனைத்து துறைகளும் சரிவைச் சந்திப்பதற்கான அதிக அவதானம் காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோரும் நாட்டிற்கு கணிசமான அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகின்றனர். கடந்த ஆண்டு 8 பில்லியன் டொலருக்கும் அதிகமான அன்னியச் செலாவணியை ஈட்டித் தந்துள்ளனர். போர் காரணமாக இவர்கள் நாடு திரும்ப நேரிட்டால், அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டமொன்று அரசாங்கத்திடம் இல்லை. இப்போதாவது அரசாங்கம் இவற்றை திட்டமிட வேண்டும்.
நாம் இவ்வாறு யோசனைகளை முன்வைக்கும் தமது அடிமைகளை வைத்து எம்மீது சேறு பூசும் வேலையையே முன்னெடுத்து வருகின்றனர். இந்த கேலிச் செயற்பாடுகளை நிறுத்தி வைத்து விட்டு, எரிசக்தி ஆற்றல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், தேவையான எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பின் பொறுப்பானது அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்குமாக அமைந்து காணப்படுகின்றன. ஆகையினால் இதை விட திட்டமிட்ட, மூலோபாய, தரவு அடிப்படையிலான தீர்வுகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.
