Mar 26, 2026 - 07:23 PM -
0
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆன்றி பிரான்சிக்கும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் (PLOTE) அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், சமத்துவக் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால் தமிழ் மக்களின் நிலங்கள் திட்டமிட்டு கையகப்படுத்தப்படுவது குறித்தும், அந்த நிலங்களை விடுவிப்பதில் அரசாங்கம் காட்டிவரும் தயக்கம் குறித்தும் ஐ.நா பிரதிநிதியிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இத்திணைக்களங்கள் அரசாங்கத்தின் நேரடி வழிகாட்டலின் கீழ் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் பல தசாப்தங்களாக அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாமை மற்றும் அது பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டது.
மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல் போன்ற ஐ.நா சபையின் தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பது குறித்தும் ஐ.நா பிரதிநிதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தமிழ்த் தேசியப் பரப்பில் நிலவும் தற்போதைய அரசியல் பிரச்சினைகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் உதவிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தமிழ் மக்களின் நிலங்களை விடுவிப்பதன் மூலம் தென்னிலங்கை சிங்கள மக்களின் ஆதரவை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே அரசாங்கம் காணி விடுவிப்பில் ஆர்வம் காட்டவில்லை என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினர்.
