Apr 7, 2026 - 03:33 PM -
0
SWYFT திட்டத்தின் கீழ், இலங்கையின் முதலாவது பூச்சிய கார்பன் வெளியீட்டு (Zero-emission) மூலப்பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த திட்டமானது தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்துடன் இணைந்து, coca-cola அறக்கட்டளையின் (TCCF) நிதியுதவியுடன், ஜனதாக்ஷன் (Janathakshan) நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நெப்டியூன் ரீசைக்கலர்ஸ் (Neptune Recyclers) இதன் மறுசுழற்சி பங்காளராகச் செயல்படுகிறது.
உலக மறுசுழற்சி தினத்தை முன்னிட்டு, Circular Symbiosis for Waste-to-Resource Value எனும் கருப்பொருளின் கீழ், சாமர்செட் எகோ (Somerset ECO) மூலப்பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் 2026 மார்ச் 18 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்தத் திட்டமானது உழஉய-உழடய அறக்கட்டளையின் நிதியுதவியுடன், தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி (Talawakelle Tea Estates PLC) மற்றும் நெப்டியூன் ரீசைக்கலர்ஸ் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், ஜனதாக்ஷன் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
வினைத்திறனான செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் பேலர் (Baler) இயந்திரங்கள், மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மின்சார முச்சக்கரவண்டிகள் போன்ற நவீன வசதிகளுடன் கூடிய இந்நிலையம், முழுமையாகப் பெண்களினால் நிர்வகிக்கப்படுகின்றமை இதன் சிறப்பம்சமாகும். இதன் ஊடாக தோட்டப்புற சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன. பெருந்தோட்டத் துறையில் கழிவு முகாமைத்துவத்திற்காக உருவாக்கப்பட்ட முதலாவது அரச-தனியார் கூட்டுப் பங்களிப்பு முயற்சியான இது முறையான கழிவுச் சேகரிப்பு, தரம் பிரித்தல் பதப்படுத்துதல் மற்றும் மீளப்பெறுதல் ஆகிய பொறிமுறைகளின் ஊடாக கழிவுகளை மீண்டும் வளங்களாக மாற்றவும், நிலையான வட்டப் பொருளாதாரத்தை (Circular Economy) வலுப்படுத்தவும் இத்திட்டம் வழிவகுக்கின்றது.
ஹேலீஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் (Hayleys Plantations) கீழ் இயங்கும் தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் சாமர்செட் தோட்டம், நுவரெலியா மாவட்டத்தின் நாணு ஓயாவுக்கு அருகில் அமைந்துள்ளது. உயர்தர தேயிலை உற்பத்தியுடன், அளவிடக்கூடிய சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் நடைமுறை ரீதியான நிலைபேண்தகு தலைமைத்துவத்தையும் எவ்வாறு பெருந்தோட்டங்கள் ஒன்றிணைக்க முடியும் என்பதற்கு இத்தோட்டம் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. மொத்தம் 456.14 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ள இத்தோட்டத்தில், 324.38 ஹெக்டேர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. வலுசக்தி செலவு அதிகரிப்பு மற்றும் கார்பன் தாக்கங்கள் போன்ற சவால்களுக்கு மத்தியில், 100% நீர்மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துவது சாமர்செட் தோட்டத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க பலமாக அமைந்துள்ளது. இந்நிலையம் 2024/2025 காலப்பகுதியில் 3,940,449 அலகு மின்சாரத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு வழங்கியுள்ளது. இது 2023/2024 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 3,425,340 அலகுகளுடன் ஒப்பிடுகையில் 515,109 அலகுகள் வருடாந்த அதிகரிப்பாகும்.
இந்நிகழ்வில் நுவரெலியா மாநகர மேயர், பிரதேச சபை தவிசாளர் ஆகியோருடன் coca-cola பெவரேஜஸ், தலவாக்கலை டீ எஸ்டேட், ஜனதாக்ஷன் மற்றும் நெப்டியூன் ரீசைக்கிளர்ஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், உள்ளூர் சமூகத்தினரும் கலந்துகொண்டனர். இலங்கையில் முறைசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஈடுபாட்டை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ், கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக ஐந்து மூலப்பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையங்கள் (MCPCs) நிறுவப்பட்டுள்ளன. இது உள்ளூர் கழிவு முகாமைத்துவ அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், மறுசுழற்சி உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
