Apr 10, 2026 - 10:36 AM -
0
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
அப்போது வாக்குச்சாவடிக்குள் கைப்பேசி எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கைப்பேசியை வாக்குச்சாவடிக்கு வெளியே வைத்து பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் தேர்தல் துறையின் உத்தரவை மீறி சிலர் கைப்பேசியை வாக்குச்சாவடிக்குள் எடுத்து சென்று த.வெ.க.வுக்கு விசில் சின்னத்தில் தங்களது வாக்குகளை பதிவு செய்தல், வி.பாட் இயந்திரத்தில் விசில் சின்னம் வருவது வரை வீடியோவாக செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான குலோத்துங்கனிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. அவர் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை புதுச்சேரி சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணிக்கும், காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதுதவிர நாம் தமிழர் கட்சி, த.வெ.க. - நேயம் மக்கள் கழகம் கூட்டணியும் களத்தில் உள்ளன.
இதனால் புதுச்சேரியில் 4 முனை போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில், புதுச்சேரியில் வாக்குப்பதிவு புதிய வரலாறு படைத்துள்ளது.
அங்கு 89.87 சதவீத வாக்குப்பதிவானது பதிவாகியுள்ளது.
இது புதுவையில் முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சமாகும்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது புதுவையில் மொத்தம் 83.4 சதவீத வாக்குகள் பதிவானமை குறிப்பிடத்தக்கது.
