Apr 10, 2026 - 11:56 PM -
0
புதுவருட காலப்பகுதியினுள் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் நோக்கில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முப்படையினர், இலங்கை பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் முன்னெடுப்பில் இந்த விசேட பாதுகாப்பு பொறிமுறை செயற்படுத்தப்படுகிறது.
இந்த கூட்டு வேலைத்திட்டத்தின் மூலம், புத்தாண்டு காலத்தில் நாடு முழுவதும் நடைபெறவுள்ள பல்வேறு விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மத வழிபாட்டு நிகழ்வுகளின் போது பாதுகாப்பு விவகாரங்கள் கண்காணிக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்காக, கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டு அறையொன்று நிறுவப்பட்டுள்ளதுடன், இது முப்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றின் ஒருங்கிணைப்புடன் கூட்டுச் செயற்பாட்டு மையமாக இயங்கும்.
இந்த விசேட செயற்பாட்டு மையத்தை பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்:
தொலைபேசி எண்கள்:
011-2013051 / 011-2027148
011-2027149 / 011-2430912
மின்னஞ்சல் முகவரி:
igp.opsroom@police.gov.lk
அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பை வளர்ப்பது, தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்துவது மற்றும் ஏதேனும் அவசர அல்லது பாதுகாப்பு நிலமைகளின் போது விரைவாக செயற்படுவதற்கான வசதிகள் இந்த மையத்தின் ஊடாக வழங்கப்படுகின்றன.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் அனைத்து மக்களுக்கும் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காக, பாதுகாப்புப் படையினருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
