Apr 11, 2026 - 05:05 PM -
0
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட பேருந்து சேவைகள் இரண்டு கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து தூர இடங்களுக்கும், தூர இடங்களிலிருந்து கொழும்புக்கும் என இரு கட்டங்களாக இந்தச் சேவை முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்தார். இதன்படி, கடந்த 8ஆம் திகதி முதல் எதிர்வரும் 13ஆம் திகதி பிற்பகல் வரை கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளதுடன், ஏப்ரல் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்புக்கான சேவை இடம்பெறவுள்ளது.
இந்த விசேட சேவைக்காக ஏனைய பிரதேச பிரிவுகளிலிருந்து 1,500 பேருந்துகள் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நேற்று (10) முதல் கடந்த 24 மணிநேரத்திற்குள் கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு 1,490 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சாதாரண பயண முறைகளின் கீழ் 1,200 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிகமாக ஹட்டன் நோக்கி 98 பேருந்துகளும், கண்டி நோக்கி 148 பேருந்துகளும், பதுளை நோக்கி 60 பேருந்துகளும் மற்றும் ஏனைய இடங்களுக்கு 84 பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கண்டி, நுவரெலியா மற்றும் ஹட்டன் ஆகிய மாவட்டங்களுக்கே அதிகளவான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக அந்த மாவட்டங்களுக்கான ரயில் போக்குவரத்து இன்னும் சீரடையாததால், அங்கு பயணிகள் கேள்வி அதிகமாக இருப்பதே இதற்குப் பிரதான காரணம் என தலைவர் தெரிவித்தார்.
தற்போது கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு பேருந்து புறப்படுவதுடன், ஒரு பேருந்து பயணிகளால் நிறைந்தவுடன் அடுத்த பேருந்தை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் பேருந்து போக்குவரத்து குறைவாகக் காணப்படும் கதிர்காமம், தங்காலை, எம்பிலிபிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்க இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து இடங்களுக்கும் பேருந்துகளை ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
