Apr 13, 2026 - 11:10 AM -
0
புத்தாண்டை முன்னிட்டுத் தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்றைய தினமும் (13) பயணிகள் வரும் வரை போக்குவரத்து வசதிகளை வழங்கத் தயாராக இருப்பதாக மாக்கும்பர பல்நிலை போக்குவரத்து மத்திய நிலையத்தின் முகாமைத்துவ உதவியாளர் டி.என். வெத்தசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளை (14) புத்தாண்டு தினத்தில் வெற்றிலை கொடுத்து உறவினர்களைச் சந்திக்கத் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாகச் செல்லும் மக்களுக்காகப் போதுமான அளவு பஸ்களைத் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில நாட்களை விட இன்று பயணிகளின் வருகையில் பெரும் வீழ்ச்சியைக் காண்கிறோம். பயணிகள் வருவார்களாயின், எந்தத் திசைக்கும் பஸ்களை அனுப்ப மாக்கும்பர போக்குவரத்து நிலைய ஊழியர்கள் தயாராக உள்ளனர்.
பயணிகள் இருக்கும் வரை பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்க்கிறோம்.
எனினும், ஒரு பஸ்ஸில் இரண்டு அல்லது மூன்று பயணிகளை மட்டும் ஏற்றிக்கொண்டு பயணிக்க முடியாது.
போதிய அளவு பயணிகள் இருந்தால் மட்டுமே எங்களால் பஸ்களை அனுப்ப முடியும். ஏனெனில், நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பயணிகளே இல்லாமல் பஸ்களை இயக்குவது ஒரு தேசியக் குற்றமாகும்.
எனவே, ஒரு பஸ்ஸில் அரைவாசிப் பயணிகளாவது இருந்தால் எங்களால் சேவையை வழங்க முடியும்.
நாளை காலை வேளையில் புத்தாண்டுச் சடங்குகளுக்காகத் தமது ஊர்களுக்குச் செல்லும் மக்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், பயணிகளின் வருகைக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளைத் தடையின்றி வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
