Apr 15, 2026 - 01:34 PM -
0
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் இன்று (15) காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து தன்னார்வ பணியாளர்களாக 50 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேவையாற்றி வந்துள்ளனர்.
இதுவரை காலமும் செஞ்சிலுவைச் சங்க மன்னார் கிளையின் அங்கத்தவர்களாக தம்மை இணைத்துக் கொள்ளும்படி கோரிக்கை விடுத்து வந்த போதிலும் எந்தவொரு நிர்வாகமும் தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்து குறித்த போராட்டத்தை இன்று காலை முன்னெடுத்தனர்.
காலை 10 மணியளவில் மன்னார் பொது நூலகத்திற்கு முன் ஒன்று கூடிய இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை தன்னார்வ பணியாளர்கள் வாயை சிவப்பு துணியால் கட்டியவாறு பதாகைகளை ஏந்தியவாறு மன்னார் மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.
அதனை தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தமது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
குறிப்பாக இந்த நிர்வாகங்கள் திட்டமிட்டு தம்மை புறக்கணித்து ஜனநாயக விரோதமாக இடைக்கால நிர்வாகத்தை முறைகேடான விதத்தில் அமைத்து பல்வேறுபட்ட நிர்வாக மோசடிகளை முன்னெடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பொதுச் சபைக் கூட்டங்கள் எதுவும் இடம்பெறாமல், தனிப்பட்ட சிலரின் விருப்பத்திற்கு அமைய நிர்வாகம் நடத்தப்படுகிறது.
இதுவரை காலமும் எந்தவித ஊதியமோ சலுகைகளோ இன்றி, மன்னார் மக்களின் மனித நேயத்தைப் பேணும் சமூகப் பணியை செய்து வரும் தன்னார்வ பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
தகுதியின் அடிப்படையில், நியாயமான முறையில் எமக்கான 'அங்கத்துவத்தை' உடனடியாக உறுதி செய்தல் வேண்டும்.
முறையற்ற விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'இடைக்கால சபை' கலைக்கப் பட்டு, மாவட்டச் செயலாளர் தலைமையில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்., ஜனநாயக அடிப்படையில், சுயாதீனமான 'பொதுச்சபைக் கூட்டம்' நடத்தப்பட வேண்டும்., இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையினால் முன்னெடுக்கப்படும் அனைத்துச் செயற்திட்டங்கள் தொடர்பான விபரங்கள், 'வெளிப்படைத்தன்மையுடன்' காட்சிப்படுத்தப்பட வேண்டும்.,
இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான செஞ்சிலுவைச் சங்கத்தின் 'யாப்பில்' குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் மன்னார் கிளைக்கும் பொருந்தும் என்பதை, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மீள்பரிசீலனை செய்து, இதற்கென தனியான 'விசாரணைக் குழு' ஒன்றை நிறுவ வேண்டும்., இடைக்கால சபையை கலைத்து நியாயமான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் நிர்வாகத்தைத் தெரிவு செய்தல் வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தமது கோரிக்கை அடங்கிய மகஜரை அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
--
