Apr 16, 2026 - 04:47 PM -
0
சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர்.
முன்னதாக பிரசார மேடைக்கு செல்லும் வழியில் மு.க.ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பேரணியாக சென்றனர். தொடர்ந்து பொதுக்கூட்ட மேடையில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது;-
“பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என கேப்டன் விஜயகாந்த் கூறுவார். இன்றுதான் நான் மு.க.ஸ்டாலினுடன் முதல் முறையாக பேரணியில் நடந்து சென்றேன். அவர் தினமும் நடைபயிற்சி செல்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று அவருடன் நடந்து சென்றபோதுதான், அவர் அரசியலில் இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குவதற்கு காரணம் அவர் மேற்கொள்ளும் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும்தான் என்பதை புரிந்துகொண்டேன்.
நாங்கள் நடந்து செல்லும்போது அந்த கூட்டத்தில் நான் மட்டும்தான் ஒரே ஒரு பெண்ணாக அங்கே இருந்தேன். மற்ற அனைவருமே ஆண்கள்தான். அவ்வாறு இருக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நிமிடமும் திரும்பிப் பார்த்து எனது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டே இருந்தார். அப்பொழுதே நான் முடிவு செய்துவிட்டேன், மு.க.ஸ்டாலின்தான் பெண் இனத்தின் பாதுகாவலர். பெண் இனத்தை உயர்த்தப்போகும் சிறந்த தலைமகன். அவர் எனக்கு கொடுத்த மரியாதையை ஒட்டுமொத்த பெண் இனத்திற்கும் கொடுத்த மரியாதையாக நான் பார்க்கிறேன்.
தமிழ்நாடு முழுக்க ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் அண்ணன் (முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்) மேல் இருக்கிறது. அதுவும் இந்த பெண்கள் கூட்டத்தில் நான் சொல்கிறேன். எங்கே பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் இருக்கிறது. இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?. இந்த ஆட்சியின் மேல் வேறு ஒன்றும் சொல்ல முடியாது. ஒரு சகோதரியாக இன்றைக்கு இந்த கூட்டணியிலே அண்ணனுக்கு வலது கரமாக இணைந்திருக்கிறேன். எங்காவது ஒரு பெண்ணுக்கு ஏதாவது என்றால் நான் அண்ணனிடம் (முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்) உரிமையாக பேசுவேன்.
எல்லா இடத்திலும் சிசிடிவியும், பெண்களுக்கான உரிமையும் பாதுகாப்பும் நிச்சயம் அண்ணன் (முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்) உருவாக்குவார் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் தேவையில்லை என்பதை இந்த நேரத்தில் நான் சொல்கிறேன். பெண்கள் என்றாலே சக்திக்கு இணையானவர்கள். ஒட்டுமொத்த சக்திகளே இன்றைக்கு ஒன்றிணைந்திருக்கிறோம். நீங்கள் எல்லாரும், நாம் அனைவரும் இணைந்து சக்திகளாக நம் தமிழ்நாட்டையும் நமது திராவிட பாரம்பரியத்தையும் காக்க வேண்டிய ஒரு தருணம் என்று சொல்கிறேன். அதனால் தமிழ்நாட்டுக்கு ஏதாவது ஒரு சின்ன ஒரு தவறு நடந்தால் உடனே நாமெல்லாம் யாரா மாறுவோம் ஜான்சிராணியாக மாறுவோம். வேலு நாச்சியாராக மாறுவோம். குயிலியாக மாறுவோம்.
அப்படி ஒரு அச்சுறுத்தல் தமிழ்நாட்டிற்கு வந்தால் ஒட்டுமொத்த பெண்கள் சக்தியும் ஒன்று திரண்டு அண்ணனுக்கும் இந்த ஆட்சிக்கும் நாங்கள் துணை நிற்போம் என்பதை இந்த நேரத்தில் ஒட்டுமொத்த பெண்களின் ஒரு அடையாளமாக உங்கள் சார்பாக நான் சொல்கிறேன். பெண் சக்தி ஒன்று திரண்டால் இந்த உலகமே நினைத்தாலும் அவரை எதிர்க்க யாரும் முடியாது என்றார்.
