Apr 16, 2026 - 11:55 PM -
0
விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தனக்கு 6.7 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக தனது சொத்து விபர அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் சொத்துக்கள் தொடர்பாக கடந்த சில நாட்களாக சமூகத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், அவர் கடந்த ஆண்டு டிசம்பர் கடைசி வாரத்தில் தனது சொத்து விபர அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்படி, அனைத்து அரசியல்வாதிகளும் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்குரிய சொத்து விபர அறிக்கைகளை பல அரசியல்வாதிகள் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளனர்.
இந்த அறிக்கையில், விபரங்களை வழங்குபவரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் மட்டுமன்றி, அவரது மனைவி/கணவன், தங்கியிருக்கும் பிள்ளைகள் மற்றும் பிற நபர்களின் சொத்து விபரங்களையும் உள்ளடக்குவது கட்டாயமாகும்.
இதன் கீழ், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்காக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த சமர்ப்பித்துள்ள சொத்து விபர அறிக்கை குறித்து சமூக ஊடகங்களில் பலத்த விவாதம் எழுந்துள்ளது.
லால் காந்த தனது அறிக்கையை 2025 டிசம்பர் 26 அன்று சமர்ப்பித்துள்ளதுடன், அதனை பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையின்படி, கே.டி. லால்காந்த தமக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களாகக் குறிப்பிட்டுள்ளவை:
நன்கொடை உறுதி மூலம் பெறப்பட்ட சுமார் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 2,500 சதுர அடி குடியிருப்பு கட்டிடம் மற்றும் 10 பேர்ச் காணி.
2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 750 சதுர அடி நிரந்தரக் கட்டிடம் மற்றும் 20 பேர்ச் வீட்டுத் தோட்டம்.
சுமார் 56 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 4,500 சதுர அடி குடியிருப்பு கட்டிடம் மற்றும் 14 பேர்ச் காணி.
பரம்பரை உரிமையின் கீழ் பெறப்பட்ட 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 1,500 சதுர அடி குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடம்.
இவற்றைத் தவிர, அசையும் சொத்துக்களாக 1.6 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 08 பவுண் தங்க நகைகள், 3 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ஒரு தங்கப் பவுண் மற்றும் 4.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய மோட்டார் வாகனம் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வருடாந்த சம்பளமாக 738,918.16 ரூபாயும், சொத்துக்களை வாடகைக்கு விடுவதன் மூலம் 400,000 ரூபாயும், நிலையான வைப்புக்களின் வருடாந்த வருமானமாக 2,755,851.97 ரூபாயும் கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது தற்போதைய தொழிலின் மூலம் வருடாந்தம் 1,800,000 ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் அமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.டி. லால்காந்த சமர்ப்பித்துள்ள தகவல்களின்படி, அவருக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களின் மொத்தப் பெறுமதி மட்டும் 6.7 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.
