Apr 18, 2026 - 04:35 PM -
0
ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட 5 பேரும் வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (18) வெலிசர பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் பிரதான சந்தேக நபரான ராகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவரும், ராஜாங்கனை, கடவத்தை, ராகம மற்றும் திருகோணமலை சீனக்குடா பகுதிகளைச் சேர்ந்த 20, 21, 22 மற்றும் 23 வயதுடைய நான்கு இளைஞர்களும் அடங்குவர்.
சமூக வலைதளங்களில் பரவிய காணொளி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த ராகம பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்ததுடன், அவரை மருத்துவப் பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
