May 6, 2026 - 01:22 PM -
0
2026 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சஞ்சு சாம்சன் எந்த வீரரும் செய்யாத ஐபிஎல் சாதனையை செய்துள்ளார்.
நேற்று (05) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சிஎஸ்கே தனது 5 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது. இதில் 156 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே-வுக்கு, சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டகள் எடுத்து வெற்றியைத் தேடித்தந்தார்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 மெகா சிக்ஸர்களுடன் 87 ஓட்டங்களை குவித்தார். இளம் வீரர் கார்த்திக் சர்மாவுடன் இணைந்து அவர் அமைத்த 114 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக இரண்டு முறை 100 ஓட்டங்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இதே 2026 சீசனில் ஏப்ரல் 11 அன்று சென்னையில் நடைபெற்ற டெல்லிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், ஆயுஷ் மத்ரேவுடன் இணைந்து சஞ்சு சாம்சன் 113 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்.
ஒரே அணிக்கு எதிராக ஒரே தொடரில் இரண்டு வெவ்வேறு வீரர்களுடன் 100 ஓட்டங்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைப்பது என்பது மிகவும் கடினமான காரியம். சிஎஸ்கே அணி தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் டெல்லிக்கு எதிராக 3 முறை 100 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார் என்றாலும், அவை 2021, 2022 மற்றும் 2023 என வெவ்வேறு ஆண்டுகளில் நிகழ்ந்தவை.
ஆனால் சஞ்சு சாம்சன் இதை ஒரே சீசனில் செய்து காட்டியுள்ளார். இந்த அபார ஆட்டத்திற்காக ஆட்டநாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் தெரிவிக்கையில்,
"அடிப்படை விஷயங்களைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். துடுப்பாட்டத்தின் போது எனது ஆரம்பக்கட்ட நகர்வுகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன், அது கை கொடுத்துள்ளது. சதத்தை நோக்கி ஆடாமல் அணியின் வெற்றிக்காக விளையாடியது மிகுந்த திருப்தியைத் தருகிறது. ஆட்டமிழக்காமல் இருந்து போட்டியை முடித்துக் கொடுப்பதில் கிடைக்கும் சந்தோஷமே தனி தான்" என்றார்.
சஞ்சு சாம்சனின் இந்த முதிர்ச்சியான ஆட்டம் மற்றும் வரலாற்றுச் சாதனை சிஎஸ்கே ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிளே ஆப் ரேஸில் சிஎஸ்கே அணி நீடிப்பதற்கு சஞ்சு சாம்சனின் இந்த அதிரடி ஃபார்ம் மிகப்பெரிய நம்பிக்கையாக அமைந்துள்ளது.
