May 8, 2026 - 03:28 PM -
0
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் மீதான உத்தரவு, எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (08) அறிவித்தது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது யோஷித ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த வழக்கின் முதலாவது 'சதித்திட்டம்' எனும் குற்றச்சாட்டில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டிருந்த டெய்சி ஃபொரஸ்ட் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதால், தனது கட்சிக்காரருக்கு எதிராக அந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது எனத் தெரிவித்தார்.
ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் தொடர்பான ஆவணங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதற்குப் பதிலளித்த முறைப்பாட்டாளர் தரப்பு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் அவரது மோசமான உடல்நிலை காரணமாகவே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் எனத் தெரிவித்தார்.
அந்த நிலைமை, பிரதிவாதி தரப்பு குறிப்பிடும் சட்ட ரீதியான வாதத்துடன் தொடர்புடையது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இந்த ஆரம்பகட்ட ஆட்சேபனை குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக வழக்கை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.
அதற்கமைய, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை முன்வைப்பதற்காக வழக்கை திங்கட்கிழமை அழைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, அது தொடர்பான பிரதிவாதி தரப்பின் நிலைப்பாட்டை செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்குமாறும் பணித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் மீதான நீதிமன்றத்தின் உத்தரவு மே 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
