May 8, 2026 - 11:55 PM -
0
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக இந்த நேரத்தில் எவ்வித உறுதியான கருத்தையும் தெரிவிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மரணப் பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே இது குறித்து உறுதியான கருத்தை வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது மரணப் பரிசோதனை இடம்பெற்று வருகின்றது. அதன் பின்னர் சட்டவைத்திய அதிகாரிகள் விடயங்களைத் தெளிவுபடுத்துவார்கள். இச்சம்பவம் குறித்து பொலிஸார் அனைத்து கோணங்களிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்."
கேள்வி: நேற்றைய தினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதே அவரைக் கைது செய்திருந்தால் இது நடந்திருக்காது அல்லவா?
பதில்: "பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்தனர். ஏனெனில் நேற்றைய பின்னரே பொலிஸாருக்கு இது குறித்துத் தெரியவந்தது. இரவுக்குள் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று பொலிஸார் நினைத்திருக்க மாட்டார்கள். மறுநாள் காலையில் அவரைக் கைது செய்யத் திட்டமிட்டிருக்கலாம். அவர் ஏற்கனவே பொலிஸ் காவலில் இருந்து விடுதலையான ஒருவர், நீதிமன்ற உத்தரவும் இருந்தது. இது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் வினவுங்கள். எவ்வாறாயினும், இது தொடர்பாக இப்போது உறுதியான கருத்தைக் கூற முடியாது. மரணப் பரிசோதனையின் பின்னரே எதனையும் கூற முடியும்." என்றார்.
