May 14, 2026 - 05:36 PM -
0
யாழ்ப்பாண மாநகரசபைக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் அந்தச் சபைக்கே உரித்தானதாக இருக்க வேண்டும்; அதனை வேறெவரும் ஆளுகை செய்ய முடியாது என முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில், யாழ். திருவள்ளுவர் கலாசார நிலையத்தின் நிர்வாகம் மாநகரசபையிடமே இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாண மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்று முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் தொடர்பாக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நம்பிக்கை நிதியம் (Trust Fund) குறித்து அதிருப்தி வெளியிட்ட யோகேஸ்வரி பற்குணராஜா, இது தொடர்பாக ஒரு முன்மொழிவைப் பிரேரித்தார்.
அவர் தனது உரையில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:
யாழ்ப்பாண மாநகரத்தின் மையப்பகுதியில், மாநகரசபைக்குச் சொந்தமான காணியில் இந்திய அரசாங்கத்தின் கொடையாக உருவானது "திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்". தற்போது இதன் நிர்வாகத்திற்காக அமைச்சரவை அனுமதியுடன் ஒரு 'நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்' அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் என்பவை மக்களின் அடிப்படை அதிகார அமைப்புகளாகும். எனவே, தனது காணியில் அமைந்துள்ள ஒரு நிலையத்தை நிர்வகிக்கும் முழு உரிமை மாநகரசபையிடமே இருக்க வேண்டும்.
மத்திய அரசின் புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சு இதன் நிர்வாகத்தைத் தன்வசம் வைத்திருக்க முயல்வது, இலங்கையின் அதிகாரப் பரவலாக்கல் கோட்பாட்டிற்கும் உள்ளூராட்சித் தன்னாதிக்கத்திற்கும் முற்றிலும் முரணானது.
இந்த பிரம்மாண்ட நிலையத்தை நிர்வகிக்கத் தேவையான பாரிய நிதி வசதி மாநகரசபையிடம் இல்லை என்பது கசப்பான யதார்த்தம்.
இந்த நிதிப் பலவீனத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி, ‘கூட்டு நிர்வாகம்’ என்ற போர்வையில் மத்திய அரசு உள்ளே நுழைந்துள்ளது. நிர்வாகக் குழுவில் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கொண்ட உறுப்பினர்களில் மத்திய அரசின் பிரதிநிதிகளே பெரும்பான்மையாக உள்ளனர். இதன் மூலம் கொழும்பு அதிகார வர்க்கமே எமது சொத்தின் மீது முடிவெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
தற்போதைய சூழலில் கூட்டு நிர்வாகம் தவிர்க்க முடியாதது என்றாலும், பின்வரும் மாற்றங்கள் அவசியமானவை
காணியின் உரிமையாளர் என்ற அடிப்படையில், நிர்வாகக் குழுவில் மாநகரசபை சார்பான பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
இந்த மையம் வருமானம் ஈட்டும் சுயசார்பு நிலையை அடையும் போது, அதன் முழுமையான நிர்வாகத்தை மாநகரசபையிடம் ஒப்படைப்பதற்கான சட்டப்பூர்வமான ஏற்பாடுகள் இப்போதே செய்யப்பட வேண்டும்.
இம்மையத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானம், மாநகரசபையின் ஒப்புதலுடன் உள்ளூர் மக்களின் கலாசார மேம்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
"சொத்து எமது மாநகரத்தினுடையது; அதிகாரம் மட்டும் ஏன் அந்நியப்பட வேண்டும்?" என அவர் கேள்வி எழுப்பினார். இந்த முன்மொழிவின் அவசியத்தை உணர்ந்த சபை உறுப்பினர்கள் அதற்கு முழுமையான ஆதரவை வழங்கியதுடன், பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சபையின் உரிமையை உறுதிப்படுத்த எந்த எல்லைக்கும் சென்று ஒத்துழைப்பதாக உறுப்பினர்கள் இதன்போது உறுதியளித்தனர்.
--
