May 15, 2026 - 10:32 PM -
0
நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்த காலப்பகுதியை விடவும் தற்போது ரூபாயின் பெறுமதி மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கம் தனது சொந்த தத்துவத்திற்கு பதிலாக வெளிநாட்டு ஆலோசனைகளின் அடிப்படையில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதே இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மேலும் தெரிவிக்கையில்:
"டொலரின் பெறுமதி உயரும் என்பதை நாங்கள் முன்னரே கூறியிருந்தோம். எமது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை தர்க்கரீதியான இடத்தில் இல்லாமையே இதற்கு முக்கிய காரணமாகும். வெளிநாட்டு ஆலோசனைகளின்படியே அரசாங்கம் செயற்பட்டது. வாகனங்களை டொலரில் இறக்குமதி செய்துவிட்டு, அதற்கான வரிகளை ரூபாயில் அறவிட்டனர். இதனால் ரூபாய் உள்ளே வந்தது, டொலர் வெளியே சென்றது."
"இன்று ரூபாயுடன் ஒப்பிடுகையில் டொலர் பெரும் உயர்வைப் பெற்றுள்ளது. ஏற்கனவே ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளதுடன், தொழிற்சாலைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்த அளவிற்கான வேகத்தில் ரூபாய் வீழ்ச்சியடைவதை இதற்கு முன் பார்த்ததில்லை. மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது கூட, ரூபாய் இந்த வேகத்தில் வீழ்ச்சியடையவில்லை."
"உடனடியாக தீர்மானங்களை மாற்றாவிட்டால், நிலைமையைச் சமாளிக்க கால அவகாசம் கிடைக்காது. பொருளாதாரச் சுருக்கம் விரைவில் மக்களைப் பாதிக்கும். அவ்வாறான நிலையில், அனைத்து சிவில் கட்டமைப்புக்களும் சீர்குலையும் வகையில் மக்கள் எதிர்வினையாற்றுவார்கள்." என்று தெரிவித்தார்.
