May 16, 2026 - 08:49 AM -
0
மழை வீழ்ச்சியில் ஓரளவு குறைவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதிகரித்திருந்த ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், மழை வீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள சில குறைவுகளுடன் இந்த நிலைமை காணப்படுவதாக அத்திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமை) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.
இருப்பினும், களு கங்கையின் மில்லகந்த நிலையத்தின் தரவுகளுக்கு அமைவாக, இதுவரையில் சிறு வெள்ள நிலைமை நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் படிப்படியாகக் குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், அத்தனகலு ஓயா பகுதியில் இதுவரையிலும் சிறு வெள்ள நிலைமை காணப்படுவதால், அத்தனகலு ஓயாவின் கீழ்நிலப் பகுதிகளான கம்பஹா, கட்டான, வத்தளை போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
களனி கங்கையை ஒட்டிய ஹங்வெல்ல பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாகவும், அதற்கமைய இன்றைய தினமும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவரம் காணப்படுவதால் ஆறுகளின் நீர்மட்டம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, நேற்று (15) மாலை நிலவரப்படி 73 பிரதான நீர்த்தேக்கங்களில் சுமார் 22 நீர்த்தேக்கங்களும், 19 நடுத்தர அளவிலான குளங்களும் வான்பாய்ந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்வரும் மழைவீழ்ச்சி நிலவரங்களைக் கருத்திற்கொண்டு வான் கதவுகள் திறக்கப்படுவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.
