May 16, 2026 - 04:13 PM -
0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவரைக் கொலை செய்வதற்குத் துணைபோனமை மற்றும் அதற்காகத் துப்பாக்கிகளை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓஸ்மண்ட் குணசேகர எனப்படும் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2025 பிப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற அறைக்குள், சட்டத்தரணி ஒருவரைப் போல் தோற்றமளித்து வந்த நபரொருவரால், சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில், தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கடந்த 13ஆம் திகதி இரவு கம்பஹா, ஸ்ரீ போதி வீதிப் பகுதியில் வைத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
வெளிநாடுகளில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் இணைந்து இந்தக் கொலைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதுடன், குற்றத்தைச் செய்வதற்குத் தேவையான துப்பாக்கிகளை வழங்கி, சந்தேகநபர் இக்கொலைக்குத் துணை புரிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, 10 தோட்டாக்கள் மற்றும் 02 மெகசின்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
