May 16, 2026 - 05:45 PM -
0
கூட்டு எதிர்க்கட்சியின் பங்கேற்புடன் கூடிய கலந்துரையாடல் ஒன்று இன்று (16) கொழும்பு, மலர் வீதி பகுதியில் நடைபெற்றது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஊழல்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் கருத்தரங்குத் தொடரின் மூன்றாவது கருத்தரங்கு, வரும் 24ஆம் திகதி ஜா-எல பகுதியில் நடத்தப்படவுள்ளதுடன், அது குறித்தே இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
பல மணிநேரம் நீடித்த இக்கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் பொதுஜன பெரமுன (SLPP) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண:
"கூட்டு எதிர்க்கட்சியினால் வரும் 24ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் எமது கருத்தரங்குத் தொடரின் 3ஆவது கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது. அது தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சிகளும் இணைந்து கலந்துரையாடலொன்றை நடத்தினோம். எதிர்க்கட்சி எல்லா இடங்களிலும் இருக்கின்றது, அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை; தேவையான நேரத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள். தற்போது எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் கட்சிகள் தத்தமது கட்சிகளைப் பலப்படுத்தும் பணிகளையே செய்து வருகின்றன. தேர்தல் ஒன்று வரும்போதுதான் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும். தேர்தல் வரும்போது நாட்டின் தேவைக்காக, பொறுப்புள்ள கட்சியாக அந்தப் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுவோம்." என்றார்.
