May 18, 2026 - 12:53 PM -
0
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்த பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைவர் ரியான் பராக் தனது அணி வீரர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
"இப்படி ஒரு கேவலமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், நாங்கள் பிளே - ஆப் சுற்றுக்குத் தகுதி பெறவே தகுதியற்றவர்கள்" என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று (17) நடைபெற்ற 2026 ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வெற்றி கட்டாயம் என்ற நிலையில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி, ஃபீல்டிங்கில் செய்த படுமோசமான தவறுகளால் வெற்றியைத் தாரை வார்த்தது.
இந்தத் தோல்வியால் அதிருப்தி அடைந்த அணி தலைவர் ரியான் பராக், போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் தனது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தார். டெல்லி அணி 188 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய போது முதல் ஓவரிலேயே கே எல் ராகுல் கொடுத்த மிக எளிமையான கேட்ச்சை யாஷ் ராஜ் புஞ்சா கோட்டைவிட்டார்.
0 ரன்னில் அவுட்டாக வேண்டிய ராகுல், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிரடியாக விளையாடினார். அபிஷேக் போரெல் மற்றும் கே எல் ராகுல் ஜோடி 10 ஓவர்களில் 100 ஓட்டங்களை குவித்து டெல்லியின் வெற்றியை உறுதி செய்தது.
மைதானத்தில் வீரர்கள் பந்துகளைத் தடுக்கத் தவறியதைக் கண்டு, பயிற்சியாளர் குமார் சங்கக்காரா டக் - அவுட்டில் இருந்தபடியே கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். தோல்வி குறித்துப் பேசிய ரியான் பராக், "மிகவும் மோசமான செயல்பாடு. நீங்கள் கிணணத்தை வெல்ல வேண்டும் என்று நினைத்தால், இன்று விளையாடியதை விடச் சிறப்பாக விளையாட வேண்டும்.
கடந்த 4, 5 போட்டிகளில் நாங்கள் காட்டிய ஆட்டத்தை விட நாங்கள் சிறந்த அணிதான். ஆனால், இதேபோல் தொடர்ந்து விளையாடினால் நாங்கள் டாப் - 4 இடத்திற்குத் தகுதி பெறவே தகுதியற்றவர்கள்" என்று காட்டமாகத் தெரிவித்தார்.
