Header Logo

வணிகம்
கொமர்ஷல் வங்கிக் குழுமத்தின் சொத்துகள் ரூ. 3.5 டிரில்லியனை கடந்தன - 2026 முதல் காலாண்டில் பல முக்கிய மைல்கற்கள் பதிவு

May 18, 2026 - 03:35 PM -

0

கொமர்ஷல் வங்கிக் குழுமத்தின் சொத்துகள் ரூ. 3.5 டிரில்லியனை கடந்தன - 2026 முதல் காலாண்டில் பல முக்கிய மைல்கற்கள் பதிவு

கொமர்ஷல் வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்கள், ரூ. 3.5 டிரில்லியன் பெறுமதியான சொத்துகளை கடந்த இலங்கையின் முதல் தனியார் துறை வங்கி குழுமமாக மாறியுள்ளன. இது 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான பல முக்கிய சாதனைகளில் ஒன்றாகும். 

2025 ஆம் ஆண்டில் கடன் வழங்கலை மையமாகக் கொண்டு சாதனை புரிந்த செயல்திறனைத் தொடர்ந்து, கொமர்ஷல் வங்கி குழுமம் 2026 மார்ச் 31 ஆம் திகதியளவில் மொத்த சொத்துகளை ரூ. 3.61 டிரில்லியனாக பதிவு செய்துள்ளது. இது ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ரூ. 230 பில்லியன் அல்லது 6.81% வளர்ச்சியை குறிக்கிறது. முந்தைய 12 மாதங்களுடன் ஒப்பிடுகையில், சொத்து வளர்ச்சியானது ரூ. 610 பில்லியன் அல்லது ஆண்டுதோறும் (YoY) 20.34% ஆக உயர்ந்துள்ளது. 

இந்த வளர்ச்சியானது, மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில் மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூ. 71.61 பில்லியனால் அதிகரித்து ரூ. 2.16 டிரில்லியனாக உயர்ந்ததன் மூலம் ஏற்பட்டது. இது ரூ. 23.87 பில்லியன் மாதாந்த சராசரி வளர்ச்சியை குறிக்கிறது. அதேபோல், வைப்புத் தொகைகள் மாதாந்தம் சராசரியாக ரூ. 57.05 பில்லியன் அதிகரித்து மொத்தமாக ரூ. 171.14 பில்லியனாக உயர்ந்து, 2026 மார்ச் 31 ஆம் திகதியளவில் ரூ. 2.87 டிரில்லியனை எட்டியுள்ளது. இதன் மூலம், குழுமம் தனது கடன் துறையில் ஆண்டுதோறும் 31.35% வளர்ச்சியையும், வைப்புத் தொகுப்பு கணக்கில் 19.04% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. குழுமத்தின் செயல்திறன் தொடர்பாக வங்கியின் தலைவர் ஷர்ஹான் முஹ்ஷீன் தெரிவிக்கையில், 2026-ஆம் ஆண்டை சிறப்பான மற்றும் நன்கு சமநிலையான (சமச்சீரான) தொடக்கத்துடன் ஆரம்பித்துள்ளோம். ஐந்தொகை வலு மற்றும் ஒழுக்கமான இடர் முகாமைத்துவம் ஆகியவற்றில் நாம் கொண்டுள்ள தெளிவான கவனத்தால் உருவான வேகம், இந்த புத்தாண்டுக்கும் தடையின்றித் தொடர்வது ஊக்கமளிக்கிறது. எதிர்வரும் ஆண்டிலும் பங்குதாரர் பெறுமதியை நிலைநிறுத்தும் அடிப்படைகளை மேலும் வலுப்படுத்த நாம் தொடர்ந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார். 

கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான சனத் மனதுங்க தெரிவிக்கையில், 

குழுமம் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்ததுடன், தனது ஒதுக்கீட்டு பாதுகாப்பு விகிதத்தை 75% க்கும் மேல் உயர்த்தியுள்ளது. இதன் மூலம், உலகளாவிய பொருளாதாரத்தின் மாற்றமடைந்து வரும் சூழ்நிலையால் உருவாகும் இடர்களுக்கு ஏற்ப ஒதுக்கீட்டு நிலைகள் வலுவாகவும் பொருத்தமாகவும் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதேசமயம், தனது CASA விகிதத்தையும் 40% க்கும் அதிகமாக உயர்த்தி, துறையில் சிறந்த நிலையைப் பெற்றுள்ளது. முக்கியமாக, நிலைபெறுதகுதன்மை, இணக்கப்பாடு மற்றும் தேசிய பொருளாதார முன்னுரிமைகள் ஆகியவற்றின் மீது நாம் செலுத்தும் கவனம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், எமது வளர்ச்சியில் அனைத்து பங்குதாரர்களின் நலன்களும் உரிய முக்கியத்துவத்துடன் கருத்தில் கொள்ளப்படுவதை உறுதி செய்கிறோம், என அவர் தெரிவித்தார். 

காலாண்டிற்கான மொத்த வருமானம் 12.47% உயர்ந்து ரூ. 99 பில்லியனாக உயர்ந்தது. அதேவேளை, வட்டி வருமானம் 14.17% அதிகரித்து ரூ. 82.89 பில்லியனாக உயர்ந்தது. இதில் பெரும்பாலான வருமானம் கடன்களிலிருந்து உருவாகியுள்ளது. வட்டி வீத உயர்வு மற்றும் பரிவர்த்தனை அளவுகளின் வளர்ச்சி காரணமாக, வட்டி செலவுகள் 14.82% உயர்ந்து ரூ. 44.07 பில்லியனாக அதிகரித்தன. இதன் விளைவாக, நிகர வட்டி வருமானம் 13.44% வளர்ச்சி பெற்று, மதிப்பாய்வு செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்கான தொகை ரூ. 38.81 பில்லியனாக பதிவானது. மொத்த செயல்பாட்டு வருமானம் 9.25% உயர்ந்து ரூ. 50.84 பில்லியனாக உயர்ந்தது. மேலும், குழுமத்தின் மதிப்பிழப்பு கட்டணங்கள் மற்றும் பிற இழப்புகளுக்கான ஒதுக்கீடு ரூ. 3.18 பில்லியனாக குறைந்தது. இது, 2025 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் பதிவான ரூ. 7.15 பில்லியனுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். ஒப்பீட்டு காலாண்டில் அதிக முன்னெச்சரிக்கை ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்ததே இதற்கான பிரதான காரணமாகும்.எனினும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளால் பாதிக்கப்படக்கூடிய துறைகளை அடையாளம் காணுவதில் குழுமம் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதேசமயம், விவேகமான முகாமைத்துவ கண்காணிப்பின் மூலம் போதுமான ஒதுக்கீடுகள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்து வருகிறது. 

இதன் விளைவாக, மூன்று மாதங்களுக்கான நிகர செயல்பாட்டு வருமானம் ரூ. 47.66 பில்லியனாக இருந்து 21% வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதேவேளை, குழுமத்தின் செயல்பாட்டு செலவுகள் 15.81% உயர்ந்து ரூ. 14.83 பில்லியனாக அதிகரித்தன. இதனால், நிதிசார் சேவைகள் மீதான வரிக்கு முந்தைய செயல்பாட்டு லாபம் ரூ. 32.84 பில்லியனாக பதிவாகி, 23.51% முன்னேற்றத்தை எட்டியது. 

நிதிசார் சேவைகள் மீதான வரிகள் 29.12% உயர்ந்து ரூ. 5.20 பில்லியனாக அதிகரித்தன. இதன் விளைவாக, மூன்று மாதங்களுக்கான குழுமத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ. 27.63 பில்லியனாக பதிவாகி, 22.51% வளர்ச்சியை எட்டியது.அதேவேளை, வருமானவரி 27.84% உயர்ந்து ரூ. 9.70 பில்லியனாக அதிகரித்ததையடுத்து, குழுமம் காலாண்டிற்கான நிகர லாபமாக ரூ. 17.94 பில்லியனைப் பதிவு செய்தது. இது இறுதி லாப அளவில் 19.80% வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. 

தனியாகப் பார்க்கும்போது, கொமர்ஷல் வங்கியானது மூன்று மாதங்களுக்கான வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 26.64 பில்லியனையும், வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ. 17.17 பில்லியனையும் பதிவு செய்துள்ளது. இவை முறையே ஆண்டுதோறும் 21.76% மற்றும் 18.46% வளர்ச்சிகளைப் பதிவு செய்துள்ளன. 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 270ற்கும் மேற்பட்ட தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 21 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Comments
0

MOST READ

காணொளி
முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

title