May 19, 2026 - 10:25 AM -
0
CAHM - 7 Star Junior Chef - 1 வது பருவகாலத்தின் மாபெரும் இறுதிப்போட்டி மே 9 அன்று, மாலபேயிலுள்ள SLIIT பிரதான பல்கலைக்கழகத்தின் CAHM வளாகத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது. இலங்கையின் அனைத்து பாகங்களிலிருந்தும் திறமையும், படைப்பாற்றலும், ஆர்வமும் மிக்க இளம் சமையல் வல்லுனர்களின் கைவண்ணங்களை போற்றிப் பாராட்டி, அவர்களுக்கு சிறப்பான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
SLIIT இலுள்ள கொழும்பு விருந்தோம்பல் முகாமைத்துவ அக்கடமியால் (Colombo Academy of Hospitality Management - CAHM) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் பிரதான அனுசரணையாளராக செரண்டிப் மா ஆலையின் 7 Star வர்த்தகநாமம் கைகோர்த்திருந்தது. தேசிய மட்டத்தில் இடம்பெற்ற இப்போட்டியானது 13 முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தமது சமையல் கலை திறமைகளை ஆராய்ந்து வெளிக்கொண்டு வருவதற்கும், விருந்தோம்பல் துறையில் நடைமுறை அனுபவத்தைப் பெற்று, எதிர்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புக்களை அறிந்து கொள்ளவும் சிறப்பான மேடையை வழங்கியுள்ளது.
இலங்கையில் விருந்தோம்பல், உணவுகள், சுற்றுலாத்துறை, மற்றும் நிகழ்வுகள் துறை சார்ந்த கல்வியை வழங்குவதில் மிகப் பாரிய தனியார் கற்கை நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற கொழும்பு விருந்தோம்பல் முகாமைத்துவ அக்கடமியானது அவுஸ்திரேலியாவின் William Angliss Institute, (RTO – 3045) இன் கூட்டாண்மையுடன், மாலபே SLIIT வளாகத்தில் இயங்கி வருகின்றது. இக்கூட்டாண்மையினூடாக, சமையற்கலையில் சர்வதேச மட்டத்தில் திறன் வாய்ந்த பயிற்சியை CAHM வழங்கி வருகின்றது. இலங்கையிலும் மற்றும் சர்வதேச ரீதியாகவும் கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வதற்கு தயார்படுத்த உதவுகின்ற, மிகச் சிறந்த கல்வி அனுபவத்தை இது மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது.
இப்போட்டியின் ஆரம்பத்திலேயே நாடெங்கிலுமிருந்து பலத்த வரவேற்புக் கிடைக்கப்பெற்றது. இதில் ஆர்வமுள்ள போட்டியாளர்கள், பெற்றோர், மற்றும் பாடசாலை ஆசிரியர்களிடமிருந்து 5,000 க்கும் மேற்பட்ட விசாரணைகள் கிடைக்கப்பெற்றதுடன், 1,400 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. மிகவும் கவனமாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு நடைமுறையைத் தொடர்ந்து, அவற்றின் மத்தியிலிருந்து 204 விண்ணப்பங்கள் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட போட்டிச்சுற்றுக்கள் மூலமாக சமையல் கலை நுணுக்கங்கள் தொடர்பான நேரடி அனுபவம், தொழிற்துறை தொடர்பான ஆழமான அறிவு, தயார்படுத்தலுக்கான ஆலோசனை வழிகாட்டல்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இதன் அடிப்படையில் மாபெரும் இறுதிப்போட்டிக்காக 10 இறுதிப் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
பல்வேறு போட்டிச் சுற்றுக்களின் பின்னர் 10 இறுதிப் போட்டியாளர்கள் மாபெரும் இறுதிப்போட்டிக்காக தமது இடங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர். அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு: பரீரா பாரிக், முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு 04; நிகேல் வெனுக் எலிஷ, புனித சூசையப்பர் கல்லூரி, கொழும்பு 10; அனுஷ்கா விக்னேஸ்வரன், கண்டி மகளிர் உயர் பாடசாலை; பிரபாஷி மதுபாஷினி குணவர்தன, களுத்துறை மகளிர் பாடசாலை; ஷம்ஹா நஸீம், இல்மா சர்வதேச மகளிர் பாடசாலை, கொழும்பு 05; சித்துகி சியன்சா மெத்சந்தி, பௌத்த மகளிர் கல்லூரி, கொழும்பு 07; சந்தருவனி நிசன்சலா, மொரட்டு மகா வித்தியாலயம்; செனுத் இன்சந்த, நாலந்தா கல்லூரி, கொழும்பு 10; பினிது செனுரங்க பெர்னாண்டோ, ஆண்கள் மாதிரி பாடசாலை, மாலபே; மற்றும் பூர்ண பண்டார தென்னக்கோன், றோயல் சர்வதேச பாடசாலை, குருணாகல்.
சமையற்கலை வல்லுனர்களான றொஹான் பெர்னாண்டோபுள்ளே, அலன் பாமர், சுரித் ஆதிஹெட்டி, மற்றும் விச்சல்யா பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய தொழிற்துறை வல்லுனர்கள் குழுவினர் இறுதிப்போட்டியாளர்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டனர். போட்டியாளர்களின் திறன், படைப்பாற்றல், பரிமாறும் வடிவம், மற்றும் ஒட்டுமொத்த திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர்.
சமையற்கலையில் தனது திறமையை சிறப்பாக வெளிக்காட்டிய ஷம்ஹா நஸீம், இல்மா சர்வதேச மகளிர் பாடசாலை, கொழும்பு 05 அவர்கள் CAHM - 7 Star Junior Chef - 1 வது பருவகாலத்தின் வெற்றியாளராக முடிசூடப்பட்டார். நிகேல் வெனுக் எலிஷ, புனித சூசையப்பர் கல்லூரி, கொழும்பு 10 அவர்கள் இரண்டாம் இடத்தையும், செனுத் இன்சந்த, நாலந்தா கல்லூரி, கொழும்பு 10 அவர்கள் மூன்றாம் இடத்தையும் முறையே வென்றுள்ளனர்.
CAHM - 7 Star Junior Chef - 1 வது பருவகாலத்தின் வெற்றியாளர் ரூபா 100,000 பணப்பரிசையும், William Angliss Institute தகைமை கற்கைநெறியின் கீழ் CAHM ல் வர்த்தகரீதியான சமையற்கலை அல்லது Patisserie துறையில் கற்பதற்கு ரூபா 2.5 மில்லியன் மதிப்பு மிக்க புலமைப்பரிசிலையும் பெற்றுள்ளார்.
இரண்டாம் இடத்திற்கான வெற்றியாளர் ரூபா 75,000 பணப் பரிசையும், மூன்றாம் இடத்திற்கான வெற்றியாளர் ரூபா 50,000 பணப் பரிசையும் முறையே பெற்றுக்கொண்டனர். இவற்றை விட, பல ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
ITC Ratnadipa ஹோட்டலில் இடம்பெற்ற மாலை நிகழ்வில் வெற்றியாளர்களுக்கான விருதுகள் வழங்கும் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மதிப்பிற்குரிய மத்தியூ டக்வேர்த் அவர்கள் பிரதம அதிதியாகவும், William Angliss Institute ன் பிரதம நிறைவேற்று அதிகாரி கிரான்ட் டிரெஹர் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்துள்ளனர். CAHM சார்பில் தலைவர் எரள் வீரசிங்க மற்றும் அதன் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள்; Serendib Flour Mills (Pvt) Ltd நிறுவனத்தின் சார்பில் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜய் ஷர்மா மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ அணியினர்; மதிப்பிற்குரிய நடுவர் குழு; SLIIT ன் சிரேஷ்ட பிரதிநிதிகள்; CAHM உடன் கைகோர்த்த ஹோட்டல்களின் பொது முகாமையாளர்கள்; கல்வி அமைச்சின் அதிகாரிகள்; பாடசாலை அதிபர்கள்; மதிப்புமிக்க வங்கிக் கூட்டாளர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் அவர்களுடைய பிரதிநிதிகள்; பெருமைமிக்க பெற்றோர்கள்; மற்றும் CAHM பணியாளர்கள் என ஏனைய பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
கொழும்பு விருந்தோம்பல் முகாமைத்துவ அக்கடமியின் (Colombo Academy of Hospitality Management - CAHM) தலைவர் திரு. எரள் வீரசிங்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் தொழில்ரீதியான சமையல் வல்லுனர்களின் அடுத்த தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் நோக்குடனேயே CAHM – 7 Star Junior Chef போட்டி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த இளம் போட்டியாளர்கள் காண்பித்த படைப்பாற்றல், தன்னம்பிக்கை, மற்றும் ஆர்வம் என்பன உண்மையில் போற்றத்தக்கவை. இலங்கையின் விருந்தோம்பல் மற்றும் சமையற்கலை தொழில்துறையின் எதிர்காலத்தை வளர்க்க உதவுவதற்கு சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழிற்துறை அனுபவத்தை வழங்கி இளம் திறமைசாலிகளை வளர்ப்பதில் CAHM தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.”
Serendib Flour Mills (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. விஜய் ஷர்மா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “CAHM – 7 Star Junior Chef போட்டி மிகவும் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளமை 7 Star மற்றும் செரண்டிப் மா ஆலை ஆகிய இரண்டுமே மிகவும் பெருமைப்படும் ஒரு தருணமாக மாறியுள்ளது. இலங்கையில் இளம் சமையற்கலை திறமைசாலிகள் கொண்டுள்ள மெச்சத்தக்க ஆர்வம், ஒழுக்கம், மற்றும் படைப்பாற்றலை இப்போட்டி எமக்குக் காண்பித்துள்ளது. CAHM உடனான கூட்டாண்மையினூடாக பேக்கிங், சமையற்கலை மற்றும் விருந்தோம்பல் ஆகிய துறைகளில் வாய்ப்புக்களை அறிந்து கொள்வதற்கு இளம் தலைமுறைக்கு உதவும் அதேசமயம். இத்தொழிற்துறையின் எதிர்காலத்திற்குப் பங்களிக்கின்ற ஒரு முயற்சிக்கு ஆதரவளிப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.”
பல மாதங்கள் நீண்ட பயிற்சி, அனுபவம், மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஒட்டுமொத்த பலனை CAHM – 7 Star Junior Chef போட்டியின் 1 வது பருவகாலம் குறித்து நிற்பதுடன், இலங்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற சமையற்கலை மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு ஆதரவளிப்பதற்கு இளம் திறமைசாலிகளை வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
உயர் தரம் கொண்ட தயாரிப்புக்கள் மூலமாக தேசத்தை வளப்படுத்தும் அடிப்படை நோக்கத்துடன் செரண்டிப் மா ஆலை இயங்கி வருவதுடன், இந்த முயற்சியினூடாக எதிர்கால சமையற்கலை திறமைசாலிகளை வளர்க்க வேண்டியதன் தேவையையும் நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
