Header Logo

செய்திகள்
கபிலவுக்கு பிணை நின்றவர்களிடம் ஏன் சாட்சியம் பெறவில்லை? - நீதவான் கேள்வி

May 19, 2026 - 08:58 PM -

0

கபிலவுக்கு பிணை நின்றவர்களிடம் ஏன் சாட்சியம் பெறவில்லை? - நீதவான் கேள்வி

சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை நின்ற இருவரிடமும் பொலிஸார் இதுவரை சாட்சியங்களை பதிவு செய்யவில்லை என்பது கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (19) தெரியவந்துள்ளது.


இது குறித்து பொலிசாரிடம் கடுமையான தொனியில் கேள்வி எழுப்பிய நீதவான், இதுவரை அவர்களிடம் இருந்து வாக்குமூலங்களோ அல்லது குறிப்புகளோ பெறப்படவில்லை என்றால் விசாரணைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்று வினவினார்.


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான நீதவான் விசாரணை, இன்று மூன்றாவது நாளாகவும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விபரம் வெளிவந்தது.


மரணமடைந்தவரின் தற்போதைய வீட்டிலும், அவர் வசித்து வந்த வீட்டிலும் உள்ள சிசிடிவி  தரவுகள் சேமிக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.


இதன்படி, அந்த சிசிடிவி கெமராக்களின் டிவிஆர் இயந்திரங்கள் மற்றும் மரணம் நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மாத்திரைகளை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை பெறுவதற்கு புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். அங்கு அடையாளம் தெரியாத இரண்டு வகையான மாத்திரைகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்போது, சமூகத்தில் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ள கபில சந்திரசேனவின் பிணையாளர்கள் குறித்து நீதவான் கேள்வி எழுப்பினார்:


"இந்த சாட்சிய விசாரணையின் போது மரணமடைந்தவருக்கு பிணை நின்ற இருவர் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன. அவர்களை சாட்சியமளிக்க அழைக்கவில்லையா?"


அதற்கு பதிலளித்த பொலிஸார், "சுவாமி... அவர்களிடம் இருந்து இதுவரை வாக்குமூலங்களை பதிவு செய்ய முடியாமல் போனது" என்று கூறினர்.


அப்போது நீதவான் கடுமையான தொனியில், "வாக்குமூலங்களை பதிவு செய்ய முடியாமல் போனதாகக் கூறி சாட்சியங்களை அழைக்காமல் இருக்க முடியுமா? அவர்களையல்லவா முதலில் சாட்சியத்திற்கு அழைத்திருக்க வேண்டும். வாக்குமூலங்களை பதிவு செய்யாவிட்டால் எவ்வாறு விசாரணை நடத்துவீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.


அதற்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி, "சுவாமி... அந்த இரண்டு பிணையாளர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.


அதற்கு பதிலளித்த நீதவான், "விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது அந்த இரு பிணையாளர்களும் இல்லையே. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றால் வாக்குமூலம் பெறுவது இன்னும் எளிதானதே. என்னிடம் இருந்து உத்தரவைப் பெற்று அதனை மிக எளிதாகச் செய்திருக்கலாம்" என்று கூறினார்.


விசாரணைகளுக்காக பொலிஸார் கோரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்த நீதவான், மரண பரிசோதனை தொடர்பான சாட்சியங்களை அழைக்குமாறு உத்தரவிட்டார்.


இதன்படி, இன்று முதலாவதாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றின் செவிலியரான கோசல ரத்னஜீவ சாட்சியமளித்தார்:


"சம்பவம் நடந்தன்று காலை 7.45 மணியளவில் முதல் தொலைபேசி அழைப்பு வந்தது. நாங்கள் நோயாளர் காவு வண்டி மூலம் அந்த வீட்டிற்குச் சென்றோம். பின்னர் அந்த வீட்டில் இருந்த ஒரு சட்டத்தரணி எங்களை மேல் தளத்திற்கு அழைத்துச் சென்றார். அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. கட்டிலின் மீது ஒரு ஆடைப் பை வைக்கப்பட்டிருந்தது. ஒருவர் தரையில் படுத்திருப்பது போல் கிடந்தார். கழுத்தில் ஒரு துணிப் பட்டி கட்டப்பட்டிருந்தது. முகம் ஒரு நாற்காலியின் மேல் இருந்தது. வைத்தியர் அந்த நபரைப் பரிசோதித்து, அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார். மரணமடைந்தவர் கபில சந்திரசேன என்பதை அறிந்துகொண்டேன். வைத்தியசாலை நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, நான் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தேன்" என்று கூறினார்.


அதனைத் தொடர்ந்து, அரவிந்த டி சில்வாவின் வீட்டில் பணிபுரிந்த ராஜேந்திர குமார் சிவகுமார் சாட்சியமளித்தார்:


"மே 07 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் கபில ஐயா எங்களது வீட்டிற்கு வந்தார். அவர் இரவு உணவு உட்கொள்ளவில்லை. இரவில் கபில அவர்கள் அரவிந்த ஐயாவுடன் பேசிக்கொண்டிருப்பதை கண்டேன். நள்ளிரவு 12.10 மணியளவில் நான் தூங்கச் செல்லத் தயாரானேன். கடைசியாக நான் தேநீர் தயாரித்துக் கொடுத்தேன். அப்போது நேரம் நள்ளிரவு 12.00 மணி முதல் 12.05 மணிக்கு இடையில் இருக்கும். நான் நள்ளிரவு 12.15 மணியளவில் தூங்கச் சென்றேன். நள்ளிரவு 1.30 மணியளவில் கழிவறைக்குச் செல்ல நான் விழித்தேன். சமையலறை பகுதியில் விளக்குகள் எரியக் கண்டேன். நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். அந்த நேரத்தில் கபில அவர்கள் கையில் ஒரு வெள்ளை நிறப் போத்தலை வைத்துக்கொண்டு ஃபில்டருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார். நான் சாரிடம் என்ன வேண்டும் என்று கேட்டேன். தண்ணீர் எடுக்க வந்ததாகக் கூறினார். நான் அறையில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினேன். பின்னர் அவர் மேலே சென்றார், நானும் தூங்கச் சென்றேன்" என்று சாட்சி கூறினார்.


பின்னர், அரவிந்த டி சில்வாவின் வீட்டில் சிசிடிவி கெமராக்களைப் பொருத்திய நிறுவனத்தின் பொறியியலாளரான கிரிஷாந்த கமலசிறி சாட்சியமளித்தார்:


"அரவிந்த டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது வீட்டில் ஐந்து கெமராக்கள் பொருத்தப்பட்டன. 2022 ஆம் ஆண்டளவில்தான் அவை பொருத்தப்பட்டன. கெமராக்களில் தரவுகள் சுமார் ஒரு மாதம் சேமிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஓராண்டிற்குப் பிறகு அழைப்பு விடுத்து அலாரம் அடிப்பதாகப் பார்க்கச் சொன்னார்கள். பரிசோதித்தபோது அதன் 'ஹார்ட் டிஸ்க்'  சேதமடைந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அது மாற்றப்பட்டது. இந்த கெமராக்களில் தரவுகள் ஏன் சேமிக்கப்படவில்லை என்று என்னால் கூற முடியாது. நான் அதனைப் பரிசோதிக்கவில்லை" என்று தெரிவித்தார்.


இதனையடுத்து மேலதிக சாட்சிய விசாரணை இந்த மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Comments
0

MOST READ

காணொளி
கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

title