Jun 6, 2026 - 02:11 PM -
0
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு நீங்கலாக 107 இடங்களில் வென்ற தவெக, தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் அந்தக் கட்சிக்கு இல்லை. இதனால், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோரியது தவெக. தவெகவின் அந்த ஆதரவு கோரிக்கையை உடனடியாக ஏற்ற காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவில் இணைந்து ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது.
மேலும், அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களையும், தற்போது மாநிலங்களவையில் ஒரு எம்.பி.யையும் பெற்றுள்ளது. இதேபோல், விசிகவும், ஐ.யு.எம்.எல். ஆகியை முதலில் வெளியில் இருந்து ஆதரவு எனும் நிலைபாட்டை எடுத்து பின்னர் இரண்டு கட்சிகளும் தலா ஒரு அமைச்சர்களை தவெக அரசில் பெற்றுள்ளன. சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியை நிபந்தனையற்ற ஆதரவை தவெக அரசுக்கு வழங்கிவருகிறது.
அதனைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்களும், அமமுக எம்.எல்.ஏ. காமராஜும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் பிறகு அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
அதேசமயம், அதிருப்தி அணியில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களுமான சி. விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் உள்ளிட்ட சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யப்போகிறார்கள், தவெகவில் இணையப்போகிறார்கள் என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. ஆனால் இருவரும் தங்கள் தொகுதிகளுக்கு சென்று அங்கே இருந்துவருகின்றனர்.
இதற்கிடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட சிலர் தவெகவில் இணைந்தனர். இந்தச் சூழலில், முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எம்சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்எஸ்எம் ஆனந்தன் ஆகிய 4 பேர் தவெக முன்னாள் அமைச்சர்கள். இவர்கள் 4 பேரும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியவர்கள். இது தவிர முன்னாள் அமைச்சர் சிவபதி தவெகவில் இணைந்தார். இவர்களுடன் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களான ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ், சிவகாசி ராஜவர்மன், கலசப்பாக்கம் முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம், சங்ககிரி சுந்தர்ராஜ், பாப்பிரெட்டி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.
அமமுக கவுன்சிலர் ஒருவர், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் தவெகவில் இணைந்தனர். முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் தவெகவில் இணைந்தார். இதேபோல் சிவகங்கை அதிமுக நிர்வாகி பொன்மணி பாஸ்கரன், ராமநாதபுரம் அமமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் என்.முருகன் உள்ளிட்டோர் ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர்.
திடீர் ட்விஸ்ட்டாக தி.நகர் தொகுதியின் முன்னாள் திமுக எம்எல்ஏ கருணாநிதியும் தவெகவில் இணைகிறார். தேர்தலின்போதே தி.நகர் முன்னாள் எம்எல்ஏ கருணாநிதியின் மகள் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்திற்கு ஆதரவு தெரிவித்து அவரை நேரில் சந்தித்த நிலையில் தற்போது கருணாநிதி தவெகவில் இணைந்திருக்கிறார். 2021 தேர்தலில் வென்ற கருணாநிதிக்கு 2026 தேர்தல் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார்.

