Jun 6, 2026 - 08:23 PM -
0
ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 3 கோடியே 50 இலட்சம் (3.5 கோடி) ரூபா பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அந்த வங்கியின் உதவி மேலாளரை 6 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை ஹொரணை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் பாதுகாப்பு அதிகாரி வரும் ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் பல ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பு செய்வதற்காக 3 கோடியே 50 இலட்சம் ரூபா பணத்தைக் கொண்டு சென்ற போது, கொள்ளையன் ஒருவன் அதனைப் பறித்துச் சென்றதாக கடந்த ஜூன் 3ஆம் திகதி ஹொரணை தலைமையகப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.
இந்தப் பணத்திற்குப் பொறுப்பாக இருந்த உதவி மேலாளரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்திய போதிலும், எந்தவொரு முக்கிய தடயமும் கண்டறியப்படாததால், பொலிஸ் மா அதிபர் இந்த விசாரணையை பேலியகொட வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்தார்.
அப்பிரிவு அதிகாரிகள் வங்கியின் சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்த போது, சம்பவத்தன்று காலையில் வங்கியின் உதவி மேலாளர் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து பணத்தை எடுப்பது தெரியவந்துள்ளது.
வங்கிக்கு வெளியே செல்லும் பகுதியில் சிசிடிவி கெமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கவில்லை. எனினும், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி கெமராக்களைப் பரிசோதித்த விசாரணை அதிகாரிகளுக்கு, சந்தேகத்திற்கிடமான எவரும் பணப்பைகளை எடுத்துச் செல்வது போன்ற காட்சிகள் தென்படவில்லை.
அதேநேரம், வங்கி வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அங்குள்ள இரும்பு கழிவுகள் போடும் கொள்கலன் பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,740,000 ரூபா பணத்தை விசாரணை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், சந்தேகநபரான உதவி மேலாளர், வங்கியின் பாதுகாப்பு அதிகாரியையும் தன்வசப்படுத்திக் கொண்டு, மிகவும் திட்டமிட்ட வகையில் இப்பணத்தைக் கொள்ளையடித்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
அதனடிப்படையில், உதவி மேலாளரும் பாதுகாப்பு அதிகாரியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்களான உதவி மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியின் தொலைபேசி விபரங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களின் வீடுகளைப் பரிசோதிப்பதற்கான சோதனை ஆணையை பிறப்பிக்கவும் ஹொரணை பிரதான நீதவான் லக்மிணி விதானகமகே உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி மேலாளர் வாவல, கங்கொட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும், மற்றைய சந்தேகநபரான பாதுகாப்பு அதிகாரி புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேல்மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

