Jun 8, 2026 - 06:21 PM -
0
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக பொறுப்புச் செயற்பாடுகள் பிரிவான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை, பாலின-உணர்திறன் பொருளடக்கங்களை மேம்படுத்துவது தொடர்பான இரண்டாவது பிரயோக பயிற்சியை ஊடக மற்றும் ஆக்கத்திறன் சார்ந்த அணியினருக்கு 2026 மே 14ஆம் திகதி சினமன் லேக்சைட் ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது. இந்த அமர்வில் 44 பங்குபற்றுனர்கள் பங்கேற்றதுடன், இதில் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரிகள் மற்றும் முன்னணி வெளியக ஊடக மற்றும் பொது உறவுகள் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அடங்கியிருந்தனர். அதனூடாக, பொறுப்பு வாய்ந்த மற்றும் உள்ளடக்கமான தொடர்பாடலுக்கான உறுதியான அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டிருந்தது.
நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் விழிப்புணர்வு, பயிற்சி மற்றும் சமூக ஆதரவாண்மை ஆகியவற்றின் ஊடாக, பாலின அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராகப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் முயற்சியான Project WAVE (Working Against Violence through Education) திட்டத்தின் கீழ் இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது, ஊடக மற்றும் ஆக்கப்பூர்வ படைப்பாற்றல் துறையினருக்கு உள்ளடக்கங்களை உருவாக்கும் போது, பாலின உணர்திறன்மிக்க அணுகுமுறையை நடைமுறையில் கையாள்வதற்கான வழிகாட்டல்களை வழங்கியிருந்தது.
Grassrooted Trust இனால் இதற்கு ஆதரவளிக்கப்பட்டதுடன், பங்கேற்றவர்கள் கலந்துரையாடல்கள், குழுச் செயற்பாடுகள் மற்றும் சுய பிரதிபலிப்புப் பயிற்சிகள் உள்ளடங்கிய பரஸ்பர தொடர்பாடல்களை கொண்ட சூழலில், பாலினம் மற்றும் உயிரியல் ரீதியான பால்நிலை ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு, சமூகமயமாக்கல் மற்றும் பொதுவான மூடநம்பிக்கைகளின் தாக்கம் போன்ற முக்கிய கருத்துருக்கள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர். அத்துடன், ஊடகச் செய்திகள், காட்சி அமைப்புகள் மற்றும் கதைக்களங்கள் எவ்வாறு சமூகத்தின் மனப்பாங்குகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி கார்மலின் ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “பல விளம்பர மற்றும் ஆக்கப் படைப்பு முகவர் நிறுவனங்களுடன் பணியாற்றும் நிறுவனம் எனும் வகையில், எம்மால் உருவாக்கப்பட்ட சில உள்ளடக்கக் கருத்துருக்களில், பாலின மாறாநிலைக் கருத்துக்களின் கூறுகளும் உணர்திறனற்ற உள்ளடக்கங்களும் காணப்படுவதை நாம் அவதானித்திருந்தோம். எந்தவொரு அடிப்படையிலும் அமையும் பாலின அடிப்படையிலான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் ஒழிப்பதில் உறுதி கொண்டுள்ள ஒரு நிறுவனம் என்ற வகையில், இதனை எவ்வாறு ஆக்கப்பூர்வமாகவும் நீடித்த நிலையான முறையிலும் கையாளலாம் என எமக்குள் நாம் சிந்தித்தோம். இதன் விளைவாக, ஆக்கப் படைப்பு முகவர் மற்றும் சந்தைப்படுத்தல் துறையினருடன் நேரடியாகத் தொடர்புகொள்வது என்ற முடிவு எடுக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், எமது முதலாவது திட்டத்தை நடத்தியிருந்தோம், அந்தப் பயணத்தின் ஒரு தொடர்ச்சியாக இப்பயிற்சி அமைந்துள்ளது. பொறுப்பு வாய்ந்த ஊடக மற்றும் தகவல் தொடர்பு நடைமுறைகளின் ஊடாக, தீங்கு விளைவிக்கும் மூட நம்பிக்கைகளுக்கும், எதிர்மறையான கருத்துகளுக்கும் எதிராகப் போராடுவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய, மரியாதையான மனப்பாங்குகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு விழிப்புணர்வுடன் கூடிய கூட்டு முயற்சியை மேற்கொள்வதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்றார்.
நிகழ்வில் பங்கேற்ற நபர் ஒருவர் குறிப்பிடுகையில், “இந்த அமர்வு மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. சந்தைப்படுத்தல் துறையைச் சேர்ந்தவர்களுடன் இது முன்னெடுக்கப்பட்டமை மிகவும் சிறந்ததாக அமைந்துள்ளது. இலங்கையின் ஒட்டுமொத்த மனநிலையையும் மாற்றியமைப்பதற்கான தொடர்பாடல்களை முன்னெடுப்பதில் இவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.” என்றார்.
2014 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட Project WAVE, 6.5 மில்லியனுக்கும் அதிகமான நபர்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஜோன் கீல்ஸ் ஊழியர்கள், பொலிஸ் அதிகாரிகள், சட்டத்தரணிகள், நடுவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் போன்ற பலரும் அடங்கியுள்ளனர். 2023 ஆம் ஆண்டில், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கும் புலனாய்வு செய்வதற்குமான பணியகத்திற்கு, ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை வழங்கிய மேம்பட்ட புலனாய்வு மென்பொருட்களுக்கான நிதியுதவி, இப்பணிகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இம்மென்பொருள் அனுசரணை, சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகளைப் புலனாய்வு செய்வதற்கான அப்பணியகத்தின் திறனை அளவிடக்கூடிய அளவில் மேம்படுத்தியுள்ளது.
இதுபோன்ற திட்டங்களினூடாக, உள்ளக மற்றும் வெளியக பங்காளர்களுடன் அர்த்தமுள்ள ஈடுபாட்டை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை தொடர்ந்து பேணுவதுடன், சமூக சுகாதாரம் தொடர்பான தனது அர்ப்பணிப்பையும் பேணி, பாலின மற்றும் சிறுவர் வன்முறைகளை தவிர்ப்பதிலும், சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதாரம், சமூக ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கம், மற்றும் உயிரியல்பரம்பல் ஆகிய நான்கும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் முக்கிய கவனக் குவியப் பகுதிகளாகும். அறக்கட்டளை, கொழும்பு பங்குச் சந்தையில் சந்தை மூலதனமாக்கல் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய நிறுவனமும், 7 வெவ்வேறான தொழிற்துறைகளில் 80 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கிவருவதுமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு பிரிவுமாகும். 150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 18,000 இற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதுடன், LMD சஞ்சிகையினால் கடந்த 20 வருடங்களாக இலங்கையின் 'மிகவும் மதிக்கப்படும் நிறுவனம்' எனத் தரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், Transparency International Sri Lanka அமைப்பின் கூட்டாண்மை அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை மதிப்பீட்டில் JKH தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. World Economic Forum இன் முழுநேர உறுப்பினராகவும், UN Global Compact இன் பங்காளராகவும் திகழும் JKH நிறுவனம், நாளைக்காக தேசத்திற்கு வலுவூட்டல் என்ற தனது CSR தொலைநோக்குப் பார்வையை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை ஊடாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசடைவைக் கணிசமாகக் குறைப்பதில் ஒரு வினையூக்கியாகச் செயற்படும் Plasticcycle என்ற சமூக தொழில்முனைவோர் முன்முயற்சியின் ஊடாகவும் முன்னெடுக்கிறது.

