Jun 11, 2026 - 10:16 AM -
0
இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில், முதல் டெஸ்ட் போட்டியில், துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்து அணி, இறுதியில் 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி வரும் ஜூன் 17 ஆம் திகதி லண்டனில் துவங்கவுள்ளது. இந்நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் டெஸ்டில் அணி தலைவராக இருந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை.
முதல் டெஸ்ட் போட்டியில் வென்றப் பிறகு, கடந்த 08 ஆம் திகதி அதிகாலையில் மதுபான கூடத்தில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, ரப்பி விளையாட்டு வீரர்களுடன் சண்டைக்கு சென்றனர். அப்போது, கைகலப்பு ஏற்பட்டு, பென் ஸ்டோக்ஸ், ஒரு ரப்பி விளையாட்டு வீரரின் முகத்தில் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவல் வெளியான நிலையில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோருடன் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில், இரண்டு வீரர்களுக்கும், 5 வருட தடை உட்பட கடும் தண்டனையை வழங்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், தற்போது விசாரணை நடைபெற்று வருவதால், ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சன் ஆகியோரை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கியுள்ளனர். மாற்றாக, துணை அணி தலைவராக இருந்த ஹேரி ப்ரூக்கிற்கு அணி தலைவர் பதவியை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜோ ரூட்டிற்கு பொறுப்பு அணி தலைவர் பதவியை கொடுத்தனர்.
பென் ஸ்டோக்ஸுக்கு மாற்றாக ஜோர்டன் காக்ஸை சேர்த்துள்ளனர். அட்கின்சனுக்கு மாற்றாக ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இணைந்துள்ளார். இதில், ஸ்டோக்ஸுக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை சேர்க்காமல், விக்கெட் கீப்பர் பேட்டராக ஜோர்டன் காக்ஸை சேர்த்துள்ளனர். இவர், ஐபிஎல் 2026 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்தார். ஆனால், ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
ஸ்டோக்ஸுக்கு மாற்றாக, ஜோர்டன் காக்ஸை சேர்த்தால், இங்கிலாந்து அணியில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் குறைந்துவிடுவார். இதனால், காக்ஸுக்கு பிளேயிங் 11 இல் இடம் கிடைக்காது எனக் கருதப்படுகிறது. மாற்றாக, சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ரெஹான் அகமதுவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் எனக் தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி பட்டியல் அறிவிப்பின்போது, ஜோ ரூட்டை, தற்காலிக அணி தலைவர் என்றுதான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டது. இதனால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தப் பிறகு, தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யவும் கூட அதிக வாய்ப்புள்ளது.

