Jun 15, 2026 - 05:40 PM -
0
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஊடாகத் குற்றவியல் ரீதியாகக் கடமையைப் புறக்கணித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கு இன்று (15) பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதிபதிகள் அடங்கிய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற மூவர் அடங்கிய நீதிபதிகள் ஆயத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதியான ஹேமசிறி பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சமிந்த அத்துகோரல தனது வாய்மூல சமர்ப்பிப்புகளை நிறைவு செய்தார்.
இதனையடுத்து முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் ஆயத்தினர், இந்த வழக்கின் தீர்ப்பை ஜூலை மாதம் 31ஆம் திகதி அறிவிப்பதாக அறிவித்தனர்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஊடாகக் குற்றவியல் ரீதியாகக் கடமையைப் புறக்கணித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையும் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இதற்கமைய, பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பும் ஜூலை மாதம் 31ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற மூவர் அடங்கிய நீதியபதிகள் ஆயத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

