Header Logo

செய்திகள்
திசைகாட்டி எம்.பி பத்மகுமாரவிற்கு எதிரான வழக்கில் சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு

Jun 15, 2026 - 09:10 PM -

0

திசைகாட்டி எம்.பி பத்மகுமாரவிற்கு எதிரான வழக்கில் சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு

சூரியகந்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கஞ்சா சோதனை சுற்றிவளைப்பு ஒன்றின் போது, தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுடன் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிரான வழக்கும், பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக அந்த கான்ஸ்டபிள் தொடர்ந்துள்ள வழக்கும் எம்பிலிபிட்டிய பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 

இதன்போது விபரங்களை ஆராய்ந்த எம்பிலிபிட்டிய பிரதான நீதவான் ஆர்.எம். மாலன் இஷார ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிரான வழக்குடன் தொடர்புடைய சாட்சியங்களை விரைவாகப் பதிவு செய்யுமாறும், இச்சம்பவம் குறித்துப் பொறுப்புக்கூற வேண்டிய சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை உடனடியாகக் கைது செய்து அடுத்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டார். 

இந்தச் சம்பவத்தின் போது பாராளுமன்ற உறுப்பினரின் கேப் வாகனத்திற்கு அத்துமீறி இடையூறு விளைவித்தமை மற்றும் குற்றவியல் ரீதியாக அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, முன்னதாக நீதிமன்றத்தினால் இணக்கச்சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

இன்று (15) அது தொடர்பான இணக்கச்சபை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்பது அங்கு தெரியவந்தது. 

வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொலிஸ் கான்ஸ்டபிள் சுசந்த ஹெட்டியாரச்சி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விஜித ஜி. புஞ்சிஹேவா பின்வருமாறு கூறினார்: 

"மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறிய 6 மணித்தியாலங்களுக்குள் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். அவர் 6 மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

ஆனால், பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிரான வழக்குத் தொடர்பாக இதுவரை எந்தவொரு சந்தேகநபரிடமிருந்தும் வாக்குமூலம் கூடப் பதிவு செய்யப்படவில்லை. கான்ஸ்டபிளைத் தாக்கி, மதுபானப் பொதியால் முகத்தில் அடித்ததாகக் கூறப்படும் எவரும் 6 மாதங்கள் கடந்தும் கைது செய்யப்படவில்லை. இதிலிருந்து 'மாலிமாவிற்கு சட்டம் அமுலாவதில்லை என்பது தெளிவாகப் புரிகிறது." என்றார். 

இந்த நிலைமை குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பிய நீதவான், வரும் ஒக்டோபர் 26ஆம் திகதிக்குள் சந்தேகநபர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து சாட்சியங்களின் சுருக்கத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், அடையாளம் காணப்படும் சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளை சுசந்த ஹெட்டியாரச்சி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்திருந்த முறைப்பாட்டை விசாரணை செய்த ஆணைக்குழு, அவரை உடனடியாக மீண்டும் சேவையில் அமர்த்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. எனினும், பொலிஸ் அதிகாரிகள் இதுவரை அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. 

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மனித உரிமைகள் அமைப்பின் சப்ரகமுவ மாகாண பணிப்பாளர் பாலித கொடகெ, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முடிவை பொலிஸார் தொடர்ந்து புறக்கணித்து வந்தால், அதற்கு எதிராக எதிர்காலத்தில் உயர் நீதிமன்றத்தை நாடி, பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். 

நீதிமன்ற உத்தரவின்படி இந்த இரு வழக்குகளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக மீண்டும் 2026 நவம்பர் 02 மற்றும் டிசம்பர் 20 ஆகிய திகதிகளில் அழைக்கப்படவுள்ளன.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

title