Jun 16, 2026 - 03:48 PM -
0
சுனைனா உடனான காதலை அதிகாரபூர்வமாக்கிய கலித் அல் அமேரி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சுனைனாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகைகள் பீக்கில் இருப்பார்கள். ஒரு சில நாயகிகளுக்கு ஆரம்பத்தில் கிடைக்கும் வரவேற்பு நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. அப்படி பல ஹீரோயின்களை தமிழ் சினிமா பார்த்துள்ளது. ஆனால் சில நாயகிகள் பிரபல நடிகைகளாக வலம் வரவில்லை என்றாலும் அவர்களின் கதை தேர்வுக்கும், நடிப்புக்கும் ரசிகர்கள் ஆதரவு தர தவறியதில்லை.
அந்த வகையில், தெலுங்கில் தனது திரைப்பயணத்தை தொடங்கி தமிழில் நகுலுடன் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. காதலில் விழுந்தேன் படத்தில் இவரது நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி, நீர்ப்பறவை, சமர், வன்மம், தெறி, நம்பியார், தொண்டன், காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி, ட்ரிப், எஸ்டேட், லத்தி மற்றும் ரெஜினா உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார். இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடரில் சுனைனாவின் நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது.
அண்மை காலமாக சுனைனா துபாயைச் சேர்ந்த பிரபல யூடியூபரான கலித் அல் அமேரியை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. அதற்கேற்ப சுனைனா உடனான காதலை அதிகாரபூர்வமாக்கிய கலித் அல் அமேரி தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சுனைனாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார்.
கலித் அல் அமேரி ஏற்கனவே சல்மா மொஹமெத் என்பவருடன் திருமணம் ஆனவர். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 17 ஆண்டுகளாக மண வாழ்க்கையில் இருந்த இவர்கள் பிரிந்துவிட்டதாக சல்மா மொஹமெத் தெரிவித்திருக்கிறார். Peacefull என்கிற நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கும் சல்மாவும் காலித் போல் இன்ஃப்ளூயன்சர் தான்.
இதற்கிடையே தான் சில மாதங்கள் முன் தனது காதலர் கையுடன் தன் கை இருப்பது போன்ற புகைப்படத்துடன் ஒன்றை பகிர்ந்திருந்தார் சுனைனா. அதன் மூலம் தான் காதலில் இருப்பதாக உறுதி செய்திருந்த சுனைனா, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடக்கவுள்ளது என்றும் கூறியிருந்தார்.
இப்படி தெரிவித்த 7 மாதங்களில் கலித் அல் அமேரி - சுனைனா ஜோடி பிரிந்திருப்பதாக தெரியவந்துள்ளது. திருமணத்தை எதிர்நோக்கி இருந்த நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை முன்னதாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர்.
தற்போது அவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவரையொருவர் 'அன்ஃபாலோ' செய்திருப்பதுடன், ஒன்றாக எடுத்த புகைப்படங்களையும் அவர்கள் நீக்கியுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் தங்கள் உறவை முறித்துக் கொண்டு, நிச்சயதார்த்தத்தை ரத்து செய்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த வதந்திகள் குறித்து சுனைனாவோ அல்லது காலித் அல் அமீரியோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

