Jun 16, 2026 - 06:37 PM -
0
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக, முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலே செய்யக்கூடிய மிகச் சரியான காரியம், தன்னிடம் உள்ள அனைத்துத் தகவல்களையும் வெளிப்படுத்தி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே ஆகும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், முன்னாள் புலனாய்வு அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரி என்ற ரீதியில், தமக்குத் தெரிந்த தகவல்களை மறைத்து வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
"எப்படியிருந்தாலும், ஒரு புலனாய்வு அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரி என்ற ரீதியில் சுரேஷ் சலே செய்யக்கூடிய சிறந்த காரியம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தனக்குத் தெரிந்த விஷயங்களை பகிரங்கப்படுத்துவதாகும். பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகும்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை மாற்றுவதற்கோ அல்லது விசாரணை அதிகாரியை மாற்றுவதற்கோ போராடுவது அல்ல. தமது மடிக்கணினியில் அல்லது தொலைபேசியில் இருக்கும் தகவல்களை வழங்குங்கள். அதை மறைத்து வைத்திருப்பதில் அர்த்தமில்லை..."
தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேயின் நலம் மற்றும் அவர் வைக்கப்பட்டுள்ள சூழல் குறித்தும் அமைச்சர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.
அவருக்காக எந்தவொரு விசேட சிறை அறையோ அல்லது விசேட வசதிகளோ செய்யப்படவில்லை என்றும், கடந்த அரசாங்கங்களின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் நபர்களை தடுத்து வைத்திருந்த அதே சாதாரண நடைமுறைதான் அவருக்கும் பின்பற்றப்படுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும், சுரேஷ் சலேவுக்குத் தேவையான மருத்துவ மற்றும் மனிதாபிமான வசதிகள் அதிகபட்சமாக வழங்கப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையைக் குறிப்பிட்டு அமைச்சரவைப் பேச்சாளர் அதனை உறுதிப்படுத்தினார்:
"சுரேஷ் சலே தனக்கு சில மருத்துவ சிகிச்சைகள் தேவை என்று கூறியவுடன் தாமதமின்றி அவை வழங்கப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். வைத்தியசாலையில் உறவினர்கள் அவரைப் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கான உணவு உறவினர்களாலேயே வழங்கப்படுகிறது. அவர் கேட்கும் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன.
அவருக்காக விசேட அறை எதுவும் அமைக்கப்படவில்லை. இதற்கு முன்னர் மற்றவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அதே முறையில்தான் அவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இருந்தவர்கள் அவ்வாறு முறைப்பாடு அளித்ததாக எங்களுக்குத் தெரியவில்லை. சலேவுக்காக நாங்கள் தனிச் சிறை அறையை உருவாக்கவில்லை. சாதாரண முறையில்தான் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கங்களிலும் தடுப்புக் காவல் உத்தரவில் கைதிகள் இருந்த அதே முறையில்தான் அவர் இருக்கிறார். அவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுகின்றன. சுகாதாரப் பிரிவினரும் பாதுகாப்புப் பிரிவினரும் அது குறித்து தீவிர அவதானத்துடன் உள்ளனர்."

