Jun 16, 2026 - 06:59 PM -
0
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) நேரில் விஜயம் செய்யவுள்ளது.
குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி இன்று (16) நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் நாளைய தினம் புதன்கிழமை வழக்கு அழைக்கப்பட்டு, நீதி அமைச்சர் குழுவை அனுமதிப்பது தொடர்பிலான அறிவித்தலை அறிவிக்கும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த அமைச்சர் குழுவுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் விசேட பிரநிதிகள் குழுவும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், செம்மணி புதைகுழியில் இருந்து இன்று 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 26 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது.
இன்றைய அகழ்வு பணியின் போது, 2 சிறுவர்கள் உட்பட 06 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை இரண்டு நாணயங்களை ஒட்டியவாறு என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் இருந்து சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 366 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
--

