Jun 22, 2026 - 03:26 PM -
0
எல் நினோ மற்றும் லா நினோ சூழ்நிலைகளின் பாதிப்புக் காரணமாக இலங்கையின் கடல் வாழ் பல்லுயிர்கள் மற்றும் ஈரூடகவாழ் சுற்றுச்சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதில் காணப்படும் சவால்கள் குறித்து காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் இணைத் தலைவர்களான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எல்.எம்.அபேவிக்ரம ஆகியோரின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் பற்றி ஆராயப்பட்டது.
காலநிலை மாற்றத்தினால் குறிப்பாக எல் நினோ நிலைமை, இலங்கையின் சமுத்திக் கட்டமைப்பு, கரையோரம், பல்லுயிரினம் மற்றும் கரையோர சமூகங்களின் வாழ்வாதார போன்றவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பதினால் பவளப் பாறைகள் வெளுத்தல் (Coral Bleaching), மீன் இனங்களின் இடப்பெயர்வு மாற்றம், பாசிப் பெருக்கம் (Algal Blooms), ஒட்சிசன் குறைந்த வலயம் (Dead Zones) உருவாதல் மற்றும் நீர்க் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய நிலையற்ற தன்மை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
அத்துடன், வறட்சியின் விளைவாக ஆற்று நீர்மட்டம் குறைவதாலும், ஆற்று அமைப்புகளில் கடல்நீர் கலப்பதாலும் குடிநீர் விநியோகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும், இந்த சுற்றுச்சூழல் மாற்றங்களால் மீன்பிடி மற்றும் சுற்றுலாத் தொழில்களில் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் கடல் வளத்தைப் பாதுகாப்பதற்கு நாரா நிறுவனம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நிறுவனங்களுக்கு இடையே மேலும் திறமையான ஒருங்கிணைப்புப் பொறிமுறையை நிறுவ வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ (El Niño) சூழ்நிலையை வெற்றிகரமாக முகங்கொடுக்க கடல்சார் கட்டமைப்பை வலுப்படுத்துதல், சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துதல், விஞ்ஞான ரீதியான தரவுகளின் அடிப்படையில் முடிவெடுப்பதை ஊக்குவித்தல் மற்றும் ஒரு ஒருங்கிணைந்த தேசிய கடல் முகாமைத்துவத் திட்டத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் குறித்த ஒன்றியம் வலியுறுத்தியது.
காலநிலை மாற்றம் ஈரூடகவாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள், இனப்பெருக்க முறைகள் மற்றும் அவற்றின் உயிர்வாழ்க்வையும் பாதிக்கின்றன என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மழைப்பொழிவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள், வறட்சி நிலைகள் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவை தவளைகள் உட்பட பல ஈரூடகவாழ் உயிரினங்களை ஆபத்திற்கு உள்ளாக்கக்கூடும் என்றும், மேலும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையையும் பாதிக்கக்கூடும் என்றும் இக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
இகுழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

