Jun 23, 2026 - 06:48 AM -
0
ஒரு நபர் தொழில்முறை வல்லுநராக மாறுவது கடினமான காரியம் என்றும், "வெற்றிகரமான தொழில்முறை வல்லுநராக" மாறுவது என்பது பெருமளவு பணம் சம்பாதிப்பது மாத்திரம் அல்ல என்றும் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற புதிய சட்டத்தரணிகளின் சத்தியப்பிரமாண உத்தியோகபூர்வ நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்துறையில் புதிதாக இணைந்துகொண்ட புதிய உறுப்பினர்களுக்கு நீதிமன்றத்தின் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதம நீதியரசர், தொழிலின் மூலம் பெறப்படும் அறிவு மற்றும் கட்சிகாரர்களுக்கு வழங்கப்படும் தரமான சேவை ஆகியவையே தொழில்முறை வெற்றியை அளவிடும் முக்கிய அளவுகோல்களாகும் எனச் சுட்டிக்காட்டினார்.
சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அனைத்து சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தின் உத்தியோகத்தர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், அவர்கள் முன்வைக்கும் விடயங்களை நம்பியே நீதிமன்றம் செயற்படும் என்றும் பிரதம நீதியரசர் நினைவு கூர்ந்தார்.
சிறந்த திறமையும் நற்பெயரும் கொண்ட நபர்கள் மாத்திரமே சட்டத்தரணிகளாக சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என சட்டத்தில் கூட தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
ஒரு சட்டத்தரணியாக தனது தரத்தை உயர் மட்டத்தில் பேணுவதற்கு அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்றும், சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட குழுவினர் நீண்டகாலமாக இந்த உன்னதமான தொழிலின் தரத்தைப் பாதுகாப்பதற்குச் செயற்படுவார்கள் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் பிரதம நீதியரசர் குறிப்பிட்டார்.
தொழில்முறை வாழ்க்கையிலும், அதற்குப் புறம்பான தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மையைப் பேண வேண்டியது மிகவும் முக்கியமானது என்றும், தொழிலின் கண்ணியம் அவர்கள் நடந்துகொள்ளும் விதத்திலேயே தங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

