Header Logo
Mogo Academy

செய்திகள்
சுரேஷ் சலேக்கு சிறிநேசன் எம்.பி நேரடி கேள்வி!

Jul 5, 2026 - 02:14 PM -

0

சுரேஷ் சலேக்கு சிறிநேசன் எம்.பி நேரடி கேள்வி!
Mobitel inner

குற்றம் செய்யாதவர்கள் எதற்கும் அஞ்சாமல் விசாரணைகளுக்கு முகம்கொடுத்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைப் பின்வருமாறு குறிப்பிட்டார்.


"மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை. குற்றம் செய்யாதவர்கள் வெளிப்படையாக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வெளியில் வரலாம். தம்மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை என்றும், ஜனாதிபதி மீதான விமர்சனங்கள் என்றும் கூறுவது அறிவுப்பூர்வமானதாகத் தெரியவில்லை. இது ஆதரவாளர்களை உணர்ச்சிவசப்படுத்துவதற்காகவும், சிறைக்குச் சென்றாலும் தனது சீற்றம் குறையவில்லை என்பதைக் காட்டுவதற்காகவுமே செய்யப்படுகிறது.


தற்போது விசாரணைகளை மேற்கொள்ளும் சாணி அபேசேகர, கடந்த காலத்திலும் நேர்மையாகச் செயல்பட்ட ஓர் அதிகாரி ஆவார். கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் மூலம் பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்ட சிறிநேசன், சுமார் 43 ஊடகவியலாளர்கள் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் பேராசிரியர் ரவீந்திரநாத், கல்வியலாளர் தம்பையா மற்றும் அருட்தந்தையர்கள் எனப் பலர் கொல்லப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு விசாரணை கடந்த காலத்திலும் நடைபெற்றது. பிள்ளையான் அவர்களுடன் இருந்த சகாக்களே தற்போது அவருக்கு எதிராக அரசுத் தரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர். அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் பரவலாகப் பேசப்படுகின்றன.


இதேவேளை, சுரேஷ் சலே என்பவர் தனது கணினி மற்றும் கைபேசியின் கடவுச்சொற்களை வழங்காமல், வாக்குமூலம் அளிக்க மறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் நிரபராதி எனில், சட்டத்திற்குப் பயப்படாமல் விசாரணைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் மூலமே எது உண்மை, எது பொய் என்பது வெளிவரும்.


யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி அகழ்வாராய்ச்சி குறித்துப் பேசிய அவர், ஐந்து ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலத்தில் 30 வருடங்களாக மூடிமறைக்கப்பட்ட உண்மைகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.


சோமரத்ன ராஜபக்ச என்பவர் கூறியதன் அடிப்படையில் தற்போது செம்மணியில் 400-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


உண்மைகள் வெளிவருவது வரவேற்கத்தக்கது என்றாலும், எலும்புக்கூடுகளின் மரபணு சோதனை மூலம் கொல்லப்பட்டவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும்.


கொலை செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நீதியும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.


இத்தகைய கொடூரங்கள் மீள நிகழாமல் இருக்க முறையான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில், 'பப்பா' மற்றும் 'சொனிக்' என அழைக்கப்படும் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 'அல்பா' எனப்படும் முக்கிய குற்றவாளிக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சிறிநேசன், அவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றார்.


கடந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடும்போது தற்போதைய அரசு விசாரணைகளில் ஓரளவு முன்னேற்றத்தைக் காட்டினாலும், பௌத்த சிங்கள மேலாதிக்கக் குருமார்களின் அழுத்தங்கள் காரணமாக உண்மைகள் முழுமையாக வெளிவருமா என்ற சந்தேகம் உள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே தமிழ் மக்கள் தொடர்ந்து சர்வதேச விசாரணையைக் கோரி வருவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் சுட்டிக்காட்டினார்.

 

--


MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara