Jul 5, 2026 - 09:14 PM -
0
உலகளாவிய ரீதியில் வெப்பமான காலநிலை ஏற்படுவதற்குக் காரணமாக அமையும் 'எல் நினோ' காலநிலை நிகழ்வு, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் தீவிரமடையக்கூடும் என உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது.
எல் நினோ காலநிலை நிகழ்வுகள் பலவீனமானது, மிதமானது, தீவிரமானது மற்றும் மிகத் தீவிரமானது என 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இம்முறை எல் நினோ நிகழ்வு மூன்றாவது உச்சக் கட்ட நிலையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பான அளவை விட அசாதாரணமாக அதிகரிப்பதே "எல் நினோ" என்ற இயற்கை காலநிலை மாற்றமாக அழைக்கப்படுகிறது.
இது பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுவதுடன், 9 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கக் கூடியது.
3-ஆவது உச்சக் கட்ட நிலை என்பது, கடல் வெப்பநிலை இயல்பான நிலையை விட 1.5°C முதல் 2.0°C வரையிலான அளவில் அதிகரிப்பதைக் குறிக்கிறது.
இலங்கை போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளுக்கு இந்த எல் நினோ நிலைமையினால் நேரடித் தாக்கங்கள் ஏற்படும். நெல் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்குத் தேவையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதன் காரணமாக விளைச்சல் குறையக்கூடும்.
பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைவதால், நீர்மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
அதிக வெப்பநிலை காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைதல், சூரிய வெப்பத் தாக்கம் (Sunstroke) மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் போக்கு அதிகரிக்கும்.
உலகளாவிய காலநிலை மாற்றம் காரணமாக மனித நடவடிக்கைகளால் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்கள் (Greenhouse gases), இயற்கையாக ஏற்படும் இந்த எல் நினோ நிலைமைகளின் தீவிரத்தை வழமையை விட கணிசமாக அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

