Jul 6, 2026 - 11:59 AM -
0
பிரிட்டிஷ் கவுன்சிலின் இலவச இணையவழி மாநாடானது, வேகமாக மாறிவரும் உலகிற்குத் தேவையான திறன்களுடன் கற்றலாளர்களைத் தயார்படுத்துவதில் படைப்பாற்றல், உள்ளடக்கம் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கை ஆராய்வதற்காக தெற்காசியா முழுவதிலுமிருந்து முன்னணி கல்வியாளர்களை ஒன்றிணைக்கிறது. பிரிட்டிஷ் கவுன்சில் ஆனது South Asia Teaching English Online Conference 2026 என்ற மூன்று நாள் இலவச இணையவழி மாநாட்டை அறிவித்துள்ளது. இம்மாநாடு, தெற்காசியா முழுவதிலுமிருந்து ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களை ஒன்றிணைத்து, இன்றைய கல்வித்துறையின் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றை ஆராய உள்ளது: இதற்கிணங்க அதிகரித்து வரும் சிக்கலான உலகில் வெற்றிகரமாக முன்னேறுவதற்கு தேவையான படைப்பாற்றல், சூழலுக்கு ஏற்ப தழுவிக்கொள்ளும் திறன் மற்றும் தொடர்பாடல் திறன்களை மாணவர்களுக்கு பாடசாலைகள் எவ்வாறு வழங்க முடியும் என்பது தொடர்பாக ஆய்வு செய்யவுள்ளது.
2026 ஜூலை 23 முதல் 25 வரை நடைபெறவுள்ள இந்த இணையவழி மாநாடு, தெற்காசியா முழுவதும் உள்ள கல்வி அமைப்புகள் பாடத்திட்டத் தேவைகள், மதிப்பீட்டு அழுத்தங்கள் மற்றும் தொடர்ந்து மாறிவரும் கற்றலாளர்களின் தேவைகள் ஆகியவற்றுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்தும் சவாலை எதிர்கொண்டு வரும் முக்கியமான தருணத்தில் நடைபெறுகிறது. ஆங்கிலமொழியானது கல்வி மற்றும் தொழில்முறை வாய்ப்புகளுக்கான முக்கிய நுழைவாயிலாகத் தொடர்ந்து இருந்தாலும், கல்வியாளர்கள் மொழித் திறன் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், விமர்சனச் சிந்தனை, ஒத்துழைப்பு, கற்றலாளர்களின் சுயமுனைவு மற்றும் செயற்பாட்டு பங்கேற்பை வளர்க்கும் அணுகுமுறைகளை அதிகமாக நாடி வருகின்றனர்.
இந்தப் பின்னணியில்,பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த முன்னணி கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் இந்த மாநாட்டில் ஒன்றுகூடி, ஆழமான கற்றலுக்கான ஊக்கியாக திகழும் படைப்பாற்றலின் பங்கு தொடர்பாக ஆராயவுள்ளனர். பன்மொழி வகுப்பறைகளை எவ்வாறு மேலும் உள்ளடக்கியதாக மாற்றலாம், புதுமையான கற்பித்தல் முறைகள் மூலம் கற்றலாளர்களின் குரலை எவ்வாறு வலுப்படுத்தலாம், மேலும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மனிதநேய மையப்படுத்தப்பட்ட கற்பித்தலை மாற்றுவதற்குப் பதிலாக அதை மேம்படுத்தும் வகையில் எவ்வாறு பயனுள்ளதாகப் பயன்படுத்தலாம் என்பன குறித்து கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
முக்கிய உரைகள், ஆசிரியர் வழிநடத்தும் கலந்துரையாடல்கள் மற்றும் வகுப்பறை வழக்குக் கள ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம், தெற்காசியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள் பொதுவான சவால்களுக்கு உள்ளூர் சூழலுக்குப் பொருத்தமான தீர்வுகளைக் கொண்டு எவ்வாறு பதிலளித்து வருகின்றனர் என்பதற்கான ஆழமான புரிதலைப் பங்கேற்பாளர்கள் பெறுவார்கள். பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த கற்றலாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதோடு, ஆசிரியர்கள் மேலும் ஈர்ப்புமிக்க கற்றல் சூழலை உருவாக்கவும், அர்த்தமுள்ள பங்கேற்பை ஊக்குவிக்கவும் உதவும் நடைமுறை அணுகு முறைகளை இந்த நிகழ்ச்சி முன்னிறுத்தும். இலங்கைக்கான பிரிட்டிஷ் கவுன்சிலின் வதிவிடப் பணிப்பாளர் ஆர்லாண்டோ எட்வர்ட்ஸ் தெரிவிக்கையில்: “இன்றைய உலகில் வெற்றிபெற கற்றலாளர்களுக்குத் தேவையான தொடர்பாடல், ஒத்துழைப்பு மற்றும் விமர்சனச் சிந்தனைத் திறன்களை வளர்ப்பதில் படைப்பாற்றல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தெற்காசிய ஆங்கிலக் கற்பித்தல் இணையவழி மாநாடு 2026 மூலம், பிராந்தியம் முழுவதிலுமிருந்து சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களை ஒன்றிணைத்து, ஆசிரியர்கள் தமது சொந்த கற்பித்தல் சூழலுக்கு ஏற்பப் பயன்படுத்தக்கூடிய நடைமுறை யோசனைகள், ஆய்வுகளால் ஆதரிக்கப்பட்ட அணுகுமுறைகள் மற்றும் வகுப்பறை உத்திகளைப் பகிர்ந்து கொள்ளவுள்ளோம். இந்த இலவச தொழில்முறை மேம்பாட்டு வாய்ப்பை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், தெற்காசியா மற்றும் அதற்கு அப்பாலுள்ள கல்வியாளர்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.”
தெற்காசிய ஆங்கிலக் கற்பித்தல் இணையவழி மாநாடு, தெற்காசியாவில் ஆங்கில மொழிக் கல்வியின் எதிர்காலம் குறித்து ஆசிரியர்களின் தொழில்முறை மேம்பாட்டை ஆதரித்து, கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் பிரிட்டிஷ் கவுன்சிலின் விரிவான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும். மேலும் அறிய இங்கே பார்க்கவும்: https://bit.ly/4ga30HU
இலங்கையைச் சேர்ந்த பேச்சாளர்கள் பற்றி
அஞ்சு மோசஸ்
கல்வி மற்றும் தலைமைத்துவத் துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட கல்வித் தலைவர், கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார். தற்போது பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கையில் ஆங்கிலம் மற்றும் பாடசாலை கல்வி பிரிவின் தலைவராக பணியாற்றுகிறார். ஆசிரியர் தொழில்முறை மேம்பாடு, டிஜிட்டல் கற்றல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
மிதிலா வீரசிங்க
இலங்கையின் பிராந்திய ஆங்கில ஆதரவு நிலையத்தில் ஆசிரியர் பயிற்றுநராகவும், கற்பித்தல் முறைகள் மற்றும் டிஜிட்டல் கற்றலில் நிபுணத்துவம் பெற்ற பாடத்திட்ட அபிவிருத்தியாளராகவும் பணியாற்றுகிறார்.
இமல்கா குமாரி விக்ரமசிங்க
தக்சல மகா வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுகிறார். படைப்பாற்றல் மிக்க, தொடர்பாடல் சார்ந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஆங்கில மொழிக் கற்பித்தலின் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்.

