Jul 6, 2026 - 12:10 PM -
0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மேலும் 50க்கும் மேற்பட்டோர் இந்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரணமடைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகள் குழுவொன்று இன்று காலை திட்டமிட்டபடி நடத்திய தாக்குதல்களினாலேயே இந்த மோதல் வெடித்துள்ளதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவும் நேரிட்டது.
நேற்று (05) சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை நள்ளிரவளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த பின்னணியிலேயே, இன்று காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறுகிய காலக் கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகள் என 1,800க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில், இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே நேற்று பிற்பகல் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 34 பேர் காயமடைந்தனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றை காட்டிக்கொடுத்தமை காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

