Jul 13, 2026 - 11:25 PM -
0
மூதூர், சித்தான்தொட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த குழுவினரை முற்றுகையிடுவதற்காகச் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) சார்ஜன்ட் ஒருவர் மஹாவலி கங்கையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய், சூரியபுர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நேற்று (12) இரவு 7.00 மணியளவில் 6 அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் இந்த முற்றுகை நடவடிக்கைக்குச் சென்றிருந்த போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
கங்கையில் விழுந்த அவர் நடவுத்து பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இன்று காலை அப்பகுதியில் கடற்படை சுழியோடிகளினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
